பனாமா ரகசிய ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

0
213

panama3பனாமா ரகசிய ஆவணங்கள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பகிரங்கமாக வெளியிடப்பட்டன. இதில் இந்தியா தொடர்பான சுமார் 37,000 ஆவணங்களும் இடம் பெற்றுள்ளன. வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச புலனாய்வுப் பத்திரிகை நிருபர்கள் குழுவினர், வரி ஏய்ப்புக்கும் உதவும் வகையில் ரகசியமாக உருவாக்கப்பட்ட சுமார் 2 லட்சம் நிறுவனங்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 15 லட்சம் ஆவணங்கள் வெளியாகியுள்ளன. 3 லட்சத்துக்கு 36 ஆயிரம் தனிநபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா தொடர்பான ஆவணங்களில் 22 நிறுவனங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிநபர்கள், சுமார் 900 இடைத்தரகர்கள் மற்றும் முகவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், இதில் இடம்பெற்றுள்ளவர்களின் சொத்து விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இந்த ரகசியத் தகவல் வெளியீடு தொடர்பாக சர்வதேச புலனாய்வு பத்திரிகை நிருபர்கள் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளிநாட்டில் தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் சட்டத்துக்கு உள்பட்டும் செயல்படுகின்றன. எனவே, இங்கு வெளியிடப்பட்டுள்ள நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், தனிநபர்களும் சட்டவிரோதமாகவோ, முறைகேடாகவோ செயல்பட்டார்கள் என்று உறுதிசெய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாமா நாட்டை தலைமையகமாகக் கொண்ட மொசாக் ஃபொன்சேகா என்ற சட்ட ஆலோசனை அமைப்பு சுமார் 40 நாடுகளில் செயல்படுகிறது. பெரிய நிறுவனங்களுக்கும், சர்வதேச வங்கிகளுக்கும் முதலீடு மற்றும் சட்டரீதியான ஆலோசனைகளை அளித்து வரும் அந்த அமைப்பிடம், அந்நிறுவனங்களின் பணப் பரிவர்தனைகள், வர்த்தகத் தொடர்புகள், ரகசிய வங்கிக் கணக்குகள் ஆகியவை குறித்த ஆவணங்கள் உள்ளன. பல்வேறு நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள் தங்கள் பணத்துக்கு உரிய வரியைக் கட்டாமல் வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆவணங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.

இந்த ஆவணங்களில் பெரும்பகுதியை ஜெர்மன் பத்திரிகையொன்று கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புடைய நபர்களின் மின்னஞ்சல் தகவல்கள், வர்த்தகப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அவற்றை 70 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சர்வதேச பத்திரிகையாளர் குழுவினர் ஆராய்ந்தனர். அதன் முதல்கட்ட ஆய்வு முடிவுகளை “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் அண்மையில் வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய இந்தியர்களுக்கு வருமான வரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY