பெண்ணைக் கடத்தியோர் அடையாள அணிவகுப்பில் இனங்காட்டப்பட்டனர்

0
213

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

identity paradeகல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது ஸாஹிறா பாடசாலை வீதியைச் சேர்ந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை கடத்தியதான முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (10) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் இனங்காட்டப்பட்டதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் கடத்தப்படும்போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரியால் கைப்பேசி மூலம் எடுக்கப்பட்ட படத்தை ஆதாரமாகக் கொண்டு ஞாயிறன்று 08.05.2016 கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பயாஸ் றஸாக் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிந்கு உட்படுத்தப்பட்டபோது சாட்சிகளால் சந்தேக நபர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்.

சாட்சிகளால் அடையாளங் காட்டப்பட்ட சந்தேக நபர்களான கல்முனை, சேனைக்குடியிருப்பு விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த லோகராசா சுகிர்தராசன் (வயது 23) மற்றும் பள்ளி ஒழுங்கை, கல்முனைக்குடி 9 ஐச் சேர்ந்த முஹம்மத் உவைஷ் (வயது 36) ஆகியோரை மே 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கோஷ்டியினரால் பெண் இரவு வேளையில் வீட்டில் வைத்து கடத்தப்படும்போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரி அந்த சந்தர்ப்பத்தை தனது கைப்பேசியைப் பாவித்து சமயோசிதமாகப் படம் பிடித்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி கடத்தப்பட்டு இன்னமும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் பெண்ணின் கடத்தலோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபராக பெண்ணின் முன்னாள் கணவரும் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் நிலையிலேயே இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY