இடைவிலகிய மாணவர்களை தேடிக் கண்டு பிடித்து மீள் கற்றலுக்கு சேர்க்கும் நடவடிக்கைக்குப் பாராட்டு

0
165

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

MSM. Naseerஇடைவிலகிய மாணவர்களைத் தேடிக் கண்டு பிடித்து மீள் கற்றலுக்காக அவர்களை பாடசாலைகளில் சேர்க்கும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக ஏறாவூர் நல்லிணக்க மற்றும் சமூக வலுவூட்டலுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இது விடயமாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர் இன்று (11) புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஏறாவூரில் பாடசாலைகளுக்குச் செல்லாமல் மறைந்து திரியும் இடைவிலகியுள்ள மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரடியாக சந்தித்து எச்சரிக்கை செய்து மீண்டும் அவர்களைப் பாடசாலை வகுப்புக்களில் சேர்ப்பித்து கல்வியைத் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக ஏறாவூர் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட இம் முயற்சிக்கு நன்றிகளையும் பாராட்டுதல்களையும் ஏறாவூர் கல்விசார் சமூகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இந் நடவடிக்கையில் ‪‎நேரடியாக ஈடுபட்ட ஏறாவூர் ‎நகர உதவிப் பிரதேச ‪‎செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தலைமையிலான அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள்,சமூக நன்னடத்தை உத்தியோகத்தர், மட்டக்களப்பு ‪மத்தி வலய ‎அதிகாரிகள், பொலிஸார், மற்றும் சமூகநல செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்கள்.

அதிகரித்த இந்த வெப்பக் காலநிலையையும் பொருட்படுத்தாது கிராமங்களிலுள்ள வீடுகளுகளிலும் சுற்றாடலிலும் இடைவிலகிய மாணவர்களைத் தேடிக் கண்டு பிடித்து கல்வியின் அவசியத்தை சம்பந்தப்பட்ட பெற்றோர் பாதுகாவலர் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளன.

இம் முயற்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளினாலும், சமூக அமைப்புகளினாலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY