கல்வியியற் கல்லூரிக்கான அனுமதி கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு: பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் அமீர் அலி

0
201

(வாழைச்சேனை நிருபர்)

Min. Ameer Ali‘இம்முறை அதிகமான மாணவர்கள் கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சையை சிறந்த முறையில் நிறைவு செய்த போதும் அவர்களுக்கான கல்வியியற் கல்லூரிக்கான அனுமதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்’ என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழ் மொழிமூல முஸ்லிம்,தமிழ் மாணவர்கள் இந்த விடயத்தை எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள் என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் தெரிவித்தார்.

06.05.2016ம் திகதி பாராளுமன்றத்தில் பிரதியமைச்சருக்கு வழங்கப்பட்ட நேர ஒதுக்கீட்டின் போதே பிரதி அமைச்சர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

‘மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் பின்னடைவை கொண்டுள்ள மாவட்டமாகும். அந்த மாவட்டத்தின் மாணவர்கள் மிகுந்த சிறமத்துடனும், அர்ப்பணிப்புடனும் கற்றவர்கள் கடந்த காலங்களில் போரின் அவலமும், கொடூரமும் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளது இன்னும் முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

எனவே ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற பூரண தகுதிகளை கொண்டிருந்த போதும் நேர்முகப்பரீட்சை வரை வந்த மாணவர்களுக்கான ஒரு மாற்றுவழியினை கல்வி அமைச்சு பரிசீலனை செய்யவேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பாக எங்களது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பேசப்பட்டது. அங்கு பிரதேசத்து கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு இதனை நாம் கொண்டு வந்தோம். குறிப்பிட்ட பாடநெறிக்கு ஒரு மாணவரை உள்வாங்க அந்தப்பாட நெறியை கற்பிக்கின்ற ஆசிரியர் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெறவேண்டும். அதனைக்கொண்டே வெற்றிடங்கள் கணிக்கப்படுகின்றன என்ற வாதத்தை அவர்கள் முன் வைத்தார்கள்.

எப்படியோ இந்த மாணவர்களுக்கான நியாயமான ஒரு தீர்வை, அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்தும் வகையிலான அரச தொழிலை பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த இடத்தில் கல்வி அமைச்சருடன், கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ ராதா கிருஷ்ணன் அவர்களும் இருக்கிறார்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாடசாலைகளுக்கும் அவர் விஜயம் மேற்கொண்டார். அங்கு நிலவுகின்ற பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணிப் பற்றாக்குறை போன்றவற்றையும் நேரடியாக அவதானித்தார்.

எனவே, அவரும் இந்த விடயத்தை கரிசனையோடு அவதானித்து இந்த மாணவர்களின் பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வை பெற்றுத்தர வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY