ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 6 கைதிகள் தூக்கிலடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களுக்கு எதிராக பெரிய அளவிலான குற்றங்களையும், தேசியப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டதாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதிபர் அஷ்ரஃப் கானி பதவிக்கு வந்த பிறகு, அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள முதல் மரண தண்டனை நிறைவேற்றம் இதுவே.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு, மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு அவர் உறுதி பூண்டுள்ளார்.
கடந்த மாதம் காபூலில் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் 64 பேர் கொல்லப்பட்ட பின்னர் அவர் தனது இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனிடையே, அனைத்து மரண தண்டனைகளையும் நிறுத்தி வைக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆப்கன் அதிபரிடம் கோரியுள்ளது.
#BBC