(Poem) மையத்து வீடு

0
27

(Mohamed Nizous)

கூடுவார் கலைவார்
கொஞ்சம் தெரிந்தவர்.
வாடுவார் அழுவார்
நெஞ்சம் நெருங்கியவர்.
நாடுவதை நடத்துவது
நாயன் செயலாகும்.
மூடுகின்ற கபுறுடன்
முடிவுறும் இவ் வாழ்க்கை.

சிறு மலர்கள் மரணங்கள்
சிந்தனையை சிதறடிக்கும்
பொறுமை கொள் பெற்றோர்க்கு
மறுமையில் வாழ்விருக்கு.
வெறுமையான வாழ்விதென
விளக்கிடும் மரணங்கள்.
வறுமையும் வளமும் இங்கு
வாழ்க்கையின் பொய் வடிவம்.

சிலருக்கு மரணங்கள்
சிந்தனையை தூண்டிவிடும்
பலருக்கு மரண வீடு
பஸார் கதை பேசுமிடம்.
புலர்கின்ற பொழுதில்
பூமியின் மேல் வாழுவது
சில நேரம் சிலருக்கு
கிடையாமல் போகலாம்.

மயானத்தில் நிற்கையிலே
மையத்தை அடக்கையிலே
தியானத்தில் முழுவாழ்வை
தீர்த்துவிட மனம் எண்ணும்.
வீதிக்கு வரும்போதே
பாதி மாறிவிடும்
ஓதிப் படித்தவர்க்கும்
உள்ள நிலை இதுவே.

LEAVE A REPLY