நாடாளுமன்றை நாறடிக்கும் நாதாரிகள்

0
452

(எம்.ஐ.முபாறக்)

parliament-karu-jayasuriyaஅராஜகமான-அநாகரீகமான ஆட்சி என்றால் என்னவென்பதை முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்தான் இந்த நாட்டு மக்கள் அதிகமாக உணர்ந்தனர். மஹிந்த அவரது அரசியல் எதிரிகளை எவ்வாறு அடக்கினார்; புதிய எதிரிகளை எவ்வாறு உருவாக்கினார்; அவரது அமைச்சர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். இந்த ஆட்சி முறைமை மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்ததால்தான் அவரை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

குறிப்பாக, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் போன்றவற்றை அவர் அடக்கி ஒடுக்கிய விதத்தை நாம் அறிவோம். மஹிந்தவின் செல்லப் பிள்ளைகளாகத் திறிந்த பல அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே காடைத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இந்த விடயத்தில் முதலிடத்தில் இருந்தாலும், முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, ஜெகத் புஷ்பகுமார மற்றும் சரண குணவர்த்தன போன்ற பலர் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குழப்பத்தில் ஈடுபடும் குழப்பவாதிகளாக இருந்தனர். முன்னாள் எம்பி அஸ்வரின் பிரதான பனி நாடாளுமன்றில் குழப்பம் விளைவிப்பதாகவே இருந்தது.

மேர்வின் சில்வா களனி தொகுதியில் தனி ராஜ்யமே நடத்தினார். அவர் வைப்பதுதான் சட்டம் என்ற நிலைதான் அங்கு இருந்தது. ஊடகங்கள்மீது கடும் அடக்குமுறையைப் பிரயோகித்தார். ரூபவாஹினி வளாகத்துக்குள் நுழைந்து அவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கை மிகவும் பிரபல்யமானது.

சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து மேர்வின் சில்வா தண்டித்ததையும் மறந்துவிட முடியாது.

அதேபோல், சரண குணவர்த்தனவும் சண்டித்தங்களில் ஈடுபடுவதும் அதற்காக சிறைக்குச் செல்வதும் அப்போது சாதாரண விடயங்களாக இருந்தன.

இவ்வாறு இவர்கள் நாட்டில் பெரும் அட்டகாசத்தைப் புரிந்த அதேவேளை, நாடாளுமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை. அங்குதான் இவர்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. காலாகாலத்துக்கும் மஹிந்தவின் ஆட்சிதான் இருக்கப் போகின்றது என நினைத்துக் கொண்டு இவர்கள் எதிர்கட்சிகளை அளவுக்கு அதிகமாகவே அடக்கினர்; கொடுமைப்படுத்தினர்.

எதிர்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் இந்தக் குழு முற்றாக மறுத்திருந்தது. மஹிந்த அரசை விமர்சித்து எவராலும் உரையாற்ற முடியாது. மீறி உரையாற்றினால் கூச்சல், குழப்பத்தில் இறங்கிவிடுவர். அடுத்தவர்கள் அந்தப் பேச்சை செவிமடுக்க விடாமல் தடுத்துவிடுவர். சபை நடுவில் வந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்து குழப்புவர்.

மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அலுத்கமகே, லலித் திஸ்ஸாநாயக மற்றும் அஸ்வர் போன்றவர்கள் இதற்காகவே நியமிக்கப்படிருன்தனர் என்று சொல்லலாம்.

பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என எவர் பார்வையாளர் கூடத்தில் இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். அவர்களின் குறி குழப்பம் விழைவிப்பதிலேயே இருக்கும்.

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல. மஹிந்தவின் ஆட்சி நெடுகிலும் இதே நிலைதான் காணப்பட்டது. சில நேரங்களில் மஹிந்த சபைக்குள் இருக்கும்போது கூட இது நடக்கும். அவை எவற்றையும் அவர் கண்டுகொள்ளமாட்டார். அந்த குழப்பங்களை அவர் மிகவும் விரும்பினார்.

மஹிந்த பட்ஜெட்டை வாசித்துக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில்கூட, இவ்வாறான கூச்சல், குழப்பங்கள் மற்றும் கை கலப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை அனைத்தையும் அவர் பார்த்துக்கொண்டு- ரசித்துக்கொண்டு இருப்பார். கட்டுப்படுத்தமாட்டார்.

ஒரு தடவை மஹிந்த பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருந்தபோது ஐக்கிய தேசிய கட்சியினர் பதாதைகளை ஏந்தி அமைதியானமுறையில் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது பின்வரிசையில் அமர்ந்திருந்த மஹிந்தவின் கட்சிக்காரர்கள் ஒடி வந்து பதாதைகளைக் கிழித்தெறிந்து கைகலப்பில் ஈடுபட்டனர்.

அந்த அமளி துமளிக்கு மத்தியிலும் மஹிந்த எதையும் கண்டுகொள்ளாமல் பட்ஜெட்டை வாசித்துக்கொண்டே இருந்தார். அவரது கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

இவ்வாறு தலைவர், அவர்களின் அட்டகாசங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான் அவர்கள் எல்லை மீறினர். தொட்டில் பழக்கம் சுட்டு காடு வரை என்பதுபோல் அந்தக் காட்டுமிராண்டித்தனம் இன்னும் தொடரவே செய்கின்றது.

ஒன்றிணைந்த எதிர்கட்சி என்ற பெயரில் தங்களை அழைத்துக்கொள்ளும் மஹிந்த அணியினர் தங்களை இன்னும் ஆளுங்கட்சிபோல் நினைத்துக் கொண்டு இன்றும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பல தடவைகள் அவர்கள் நாடாளுமன்றில் குழப்பங்களில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன் தினம் கை கலப்பிலேயே ஈடுபட்டனர்.

மஹிந்தவின் பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினர் மீது அவர்கள் மேற்கொண்ட தாக்குதலானது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டமாகும்.

மஹிந்தவின் காலத்தில் எதிர்கட்சியினர் இவ்வாறு நடந்திருந்தால் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. ஆனால், இந்த அரசு நாகரீகமான-ஜனநாயக அரசு என்பதால் மஹிந்த கூட்டத்தினர் அச்சமின்றி ஆடுகின்றனர். நாடாளுமன்றத்தைத் தொடர்ந்தும் நாரடிக்கின்றனர்.

இந்த ஆட்சியிலும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனம் தொடர்வதற்கு அரசு இனியும் அனுமதி வழங்கக்கூடாது. இந்த ஆட்சியிலாவது நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இந்த நாட்டின் உச்ச கௌரவத்துக்குறிய நாடாளுமன்றம் அசிங்கப்படுத்தப்படுவது ஒட்டுமொத்த நாடும் அசிங்கப்படுத்தப்படுவதற்குச் சமமாகும்.

ஆகவே, இனிமேலாவது இவ்வாறான அசிங்கங்களை இல்லாதொழிப்பதற்கு இந்த அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். அந்த விருப்பத்தை அரசு உடன் நிறைவேற்றி இந்த நாட்டின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.

LEAVE A REPLY