சிரியாவின் அலெப்போவில் யுத்த நிறுத்தம் அமுல்

0
82

coltkn-01-கடந்த பல தினங்களாக உக்கிர தாக்குதல் இடம்பெற்ற சிரியாவின் அலெப்போ நகரில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நகரில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையின் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த யுத்த நிறுத்தம் புதன் நள்ளிரவோடு அமுலுக்கு வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்தபோதும் அங்கு தொடர்ந்து மோதல் நீடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் இரு தரப்புக்கும் இடையில் ஒருசில பகுதிகளில் மோதல் தொடர்வது ஆச்சரியமான விடயமல்ல என்று குறிப்பிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி, அதனை நிறுத்த களத்தில் இருக்கும் இரு தரப்பு கட்டளைத் தளபதிகளுடனும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

இந்த யுத்த நிறுத்தத்தை சிரிய இராணுவம் உறுதி செய்துள்ளது. சிரிய படை அலெப்போவில் 48 மணி நேரத்திற்கு அமைதி காக்கும் என்று ஐ.நாவுக்கான ரஷ்ய தூதுவர் விடாலி சுர்கின் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் சிரியாவில் கடந்த பெப்ரவரியில் பகுதி அளவான பலவீனமான யுத்த நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வந்தது. எனினும் இந்த யுத்த நிறுத்தம் கடுமையாக மீறப்படும் சம்வங்கள் பதிவாகின்றன.

இந்த யுத்த நிறுத்தத்தில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கும் குழு, அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி உள்ளடக்கப்படவில்லை.

யுத்த நிறுத்தம் மோதல்களை தவிர்க்க தவறும் பட்சத்தில் அது பேரனர்த்தமாக இருக்கும் என்றும் துருக்கி எல்லையை நோக்கி மேலும் 400,000 அகதிகளை இட்டுச் செல்லும் என்றும் சிரியாவுக்கான ஐ.நாவின் விசேட தூதுவர் ஸ்டபன் டி மிஸ்டுரா எச்சரித்துள்ளார். கடந்த வாரம் உக்கிரமடைந்த அலப்போ மோதல் கடந்த ஓரண்டுக்கு மேலான காலத்தில் ஏற்பட்ட மோசமான மோதலாக இருந்தது. இதன்போது பலரும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. கடந்த இரு வாரங்களில் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் விபரித்துள்ளனர்.

இதன்போது நகரின் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்கு மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் கடந்த செவ்வாயன்று முன்னேற்றம் கண்டபோதும் புதன் காலையாகும்போது அவர்கள் பின்வாங்கச் செய்யப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இங்கு கிளர்ச்சியாளர்களின் கூட்டணி ‘பத்தாஹ் ஹலப்’ (அலெப்போ ஆக்கிரமிப்பு) என்ற பெயரில் அரச படைக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் கடந்த செவ்வாயன்று நகரின் மேற்கு பகுதியில் அரச படையின் பாதுகாப்பு அரணை முறியடித்து தாக்குதல் நடத்தினர்.

இங்கு கடந்த செவ்வாய் இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை, வான் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றன.

இந்நிலையில் முற்றுகைப் பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உதவிகள் செல்வதை சிரிய அரசு தொடர்ந்து தடுத்து வருவதாக ஐ.நா. மனிதாபிமான ஆலோசகர் ஜான் எகலன் குறிப்பிட்டார்.

சிரிய விமானப்படைத் தளத்தில் இருக்கும் சுமார் 30 விமானங்களை வாபஸ் பெற்றதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா கடந்த மார்ச் மாதத்திலேயே சிரியாவில் இருந்து தமது படையினரை வாபஸ் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்தது. இதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே ரஷ்யா சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு ஆதரவாக வான் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது.

LEAVE A REPLY