சாய்ந்தமருது நகர சபை பற்றியோ ஜெமீலை விமர்சிக்கவோ சிராஸ் மீராசாய்வுக்கு அருகதை கிடையாது; தில்ஷாத் MYP

0
234

244082a7-2ca3-4c9c-b774-26e9b13f450bசாய்ந்தமருது நகர சபை பற்றிப் பேசுவதற்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களை விமர்சிப்பதற்கோ முன்னாள் மேயர் சிராஸ் மீராசாய்வுக்கு எந்த அருகதையும் கிடையாது என கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பனர் ஏ.எம்.எம்.தில்ஷாத் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறித்து கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் மீராசாய்வு இணையத்தளங்களில் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இளைஞர் பாராளுமன்ற உறுப்பனர் ஏ.எம்.எம்.தில்ஷாத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் அரசியல் முன்னேற்றத்தையும் அவரது சேவைகளையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமையின் காரணமாகவே சிராஸ் மீராசாய்வு சில அபாண்டமான பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். சிராஸ் மீராசாய்வு இன்று அரசியல் போக்கிடமில்லாமல் விரக்தியுடன் அலைந்து திரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதை எல்லோரும் அறிவோம். இனி இவர் எந்தக் கட்சியில் சேரப்போகிறார்? ஜே.வி.பி.யிலா? அல்லது ஹெல உறுமயிலா என்று மக்கள் கேட்கும் அளவுக்கு இவரது அரசியல் மிகவும் கீழ்த்தரத்திற்கு சென்று விட்டது.

கலாநிதி ஜெமீலின் தயவினால் அரசியல் முகவரி பெற்று, அவர் மூலமே முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்து, கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளராகவும் களமிறங்கி, மேயர் பதவியை பெற்றுக் கொண்ட இவர், அப்பதவி பறி போனதும் அமைச்சர் அதாவுல்லாவுடன் இணைந்து இணைப்பாளர் பதவியொன்றைப் பெற்றார். அதாவுல்லாவின் அரசியல் அதிகாரம் பறி போனதும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் சேர்ந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இப்போது அந்தக் கட்சியும் இல்லை. இரு வருட காலத்தில் மூன்று கட்சிகளுக்கு பல்டியடித்து இலங்கையில் சாதனை நிலை நாட்டியுள்ள ஒரே ஒரு அரசியல்வாதி இவர்தான். பதவி மோகத்தைத் தவிர வேறு நல்ல சிந்தனை எதுவும் தன்னிடம் கிடையாது என்பதை நிரூபித்துள்ளார்.

அமைச்சர் அதாவுல்லாவுடன் இணைந்து கொண்டபோது சாய்ந்தமருதுக்கு நகர சபை கேட்டே அவருடன் இணைவதாக மேடை போட்டு தம்பட்டம் அடித்தார். ஆனால் அதாவுல்லாவின் தேசிய காங்கிரசில் இருந்த சுமார் ஒரு வருட காலமும் முழுக்க முழுக்க இணைப்பாளர் பதவி கேட்டே அமைச்சரின் பின்னால் அலைந்து திரிந்தார். அதாவுல்லாவுடன் இருக்கும் ஆஹிர் போன்றோர் இதற்கு சாட்சி பகர்வார்கள். அந்த இணைப்பாளர் பதவி 2014 ஜனாதிபதித் தேர்தலின்போதே அவருக்கு கிடைத்தது. பாவம் இவரின் தரித்திரியமோ என்னவோ மஹிந்த தோல்வியுற்று அதாவுல்லாவின் அமைச்சு பதவியும் பறிபோய் விட்டது.

இனி அதிகாரமில்லாத அதாவுல்லாவுடன் இருந்து என்ன பயன் என நினைத்து கடந்த பொதுத் தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசில் சேர்ந்தார். தானும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என இவர் கேட்டபோது, அமைச்சர் ரிஷாத் கூறியிருந்தார் ஜெமீலைத்தான் தீர்மானித்துள்ளேன் என்றும் ஜெமீல் ஒத்துக்கொண்டால் உங்களுக்கு சந்தர்ப்பம் தருகின்றேன் சொன்னார். அதன்படி ஜெமீல் உடன்பட்டதன் பேரிலேயே இவருக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஆனாலும் மயிலுக்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அது வீ.சி.இஸ்மாயிலாகத்தான் இருப்பார் என்று வீ.சி. அலை வீசியதால் இவர் பயந்து விட்டார். அதனால் இவர் உண்மைக்கு உண்மையாக தேர்தல் வேலைகளில் ஈடுபடாமல் முஸ்லிம் காங்கிரஸ் தரகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். வி.சி.வெல்வதற்கும் ஜெமீல் தேசியப்பட்டியலில் எம்.பி. ஆவதற்கும் நீ ஏன் பாடு பட வேண்டும்? என்று மு.கா. தரகர்களினால் கொடுக்கப்பட்ட கயிற்றை விழுங்கிக் கொண்டு இவர் தேர்தல் கேட்பது போன்று நடித்தார். தற்போது மீண்டும் மு.கா.வில் இணைவதற்காக அலையும் இவர் அந்த தேர்தல் காலத்திலேயே மு.கா. தரகர்களிடம் அதற்கான உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண்டே மயிலுக்கும் ரிஷாதிற்கும் சதி செய்தார்.

நான் பொருளாதாரத்தில் பலவீனப்பட்டுள்ளேன். தேர்தல் செலவுக்கு காசு இல்லை என்று அமைச்சர் ரிஷாதிடம் மன்றாடி அவரது அனுதாபத்தையும் அனுசரனையையும் பெற்றிருந்தார். தேர்தல் முடிவில் மயிலுக்கு ஆசனம் இல்லை என்றதும் முதலில் நிம்மதி பெருமூச்சு விட்டது மு.கா.வோ ஹக்கீமோ இல்லை, சிராஸ்தான் என்பதை அவருடன் இருந்த சகாக்கள் சாட்சி கூறுவார்கள். ஏனென்றால் அவர் விருப்பு வாக்கில் இரண்டாவது இடத்தில் கூட இல்லாமல் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.

ஆனால் ஜெமீல் இவருக்கு விட்டுக் கொடுக்காமல் அவரே போட்டியிட்டிருந்தால் அதிக்கப்படியான வாக்குகளினால் மயில் ஒரு ஆசனத்தை வென்று ஜெமீல் இன்று எம்.பி.யாக வீற்றிருந்திருப்பார்.

இது ஒரு புறமிருக்க அமைச்சர் றிஷாத் தனது அமைச்சில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், எஸ்.எஸ்.பி.மஜீத் போன்றோருக்கு நிறுவனத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டபோது தனக்கும் அவ்வாறான ஒரு தலைவர் பதவி வேண்டும் அல்லது குறைந்தது ஒரு பணிப்பாளர் பதவி தர வேண்டும் என சிராஸ் அடம்பிடித்தார். அமைச்சர் அசையவில்லை. ஆலோசகர் எனும் பெயரில் ஒரு இணைப்பாளர் பதவியையே இவருக்கு வழங்கினார்.

அதேவேளை அண்மையில் கல்முனை தொகுதி உட்பட அம்பாறை மாவட்டத்தில் கட்சிப் புனரமைப்பு வேலைகளையும் அமைச்சர் ரிஷாத், ஜெமீலிடமே ஒப்படைத்தார். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் நொந்து விரக்தியடைந்துள்ள சிராஸ் மீராசாய்வு, ஜெமீலுடன் கொண்ட முரண்பாடு காரணமாக அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். எல்லாப் பொறுப்புகளையும் ஜெமீலிடம் ஒப்படைத்தால் நான் ஏன் அமைச்சர் ரிஷாதுடன் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் சிராஸ் கேட்டிருந்தார்.

இந்த கொதிப்பிலேயே அவர் இப்போது கலாநிதி ஜெமீலை திட்டித் தீர்க்கின்றார். தனது தகுதி, தராதரம் என்னவென்று அறியாத இவர் ஜெமீலுக்கு கொடுத்தது போன்று தனக்கும் கூட்டுத்தாபன தலைவர் பதவி கேட்பது எந்த வகையில் நியாயம்? ஜி.சி.ஈ.ஒ.எல். கூட சித்தியடையாத ஒருவர் பல்கலைக்கழக முதுமாணி பட்டம் பெற்று கலாநிதி தரத்தில் உள்ள ஒருவரின் அந்தஸ்த்தை எவ்வாறு எட்ட முடியும்? பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது இவரது எண்ணம். ஆனால் அமைச்சர் ஹக்கீமிடம் போன்று அந்த பருப்பு அமைச்சர் ரிஷாதிடம் வேகாது என்பதை இவர் இப்போது புரிந்து கொண்டிருப்பார்.

அதனால் தனக்கு அரசியல் போக்கிடம் ஒன்றை தேடிக் கொள்வதற்காக மறைந்து கிடக்கும் தன்னை மக்கள் மத்தியில் மீண்டும் ஜனரஞ்சகப்படுத்திக் கொள்வதற்காக ஜெமீலை விமர்சித்து அறிக்கை வெளியீடு வருகின்றார். இவரது அரசியல் ஜெமேலை விமர்சிப்பதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் சத்தியாக்கிரகம் இருக்கப்போவதாக ஜெமீல் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இவருக்கு ஏன் பொறுக்க முடியாத கடுப்பை ஏற்படுத்த வேண்டும்?

ஊரா கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓத ஜெமீல் முற்படுகிறார் என்று இவர் என்ன அடிப்படையில் சொல்கிறார். சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் பேசுகின்ற அருகதை இந்த ஊரில் ஜெமீலைத் தவிர வேறு எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது என்பதை சிராஸ் புரிந்து கொள்ள வேண்டும். தனது மேயர் பதவி பறி போன ஆத்திரத்தில் மு.கா.வை திட்டுவதற்கும் அமைச்சர் அதாவுல்லாவுடன் இணைவதற்கும் ஒரு கோசம் வேண்டும் என்பதற்காகவே சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் போன்ற அமைப்புகள் முன்னெடுத்து வந்த உள்ளூராட்சி மன்றம் எனும் ஒரு புனிதமான விடயத்தை தனது சுய அரசியல் லாபத்திற்காக மாசுபடுத்திய ஒருவர்தான் இந்த சிராஸ்.

ஏனெனில் சாய்ந்தமருது மக்களின் நீண்ட காலத் தேவையை வென்றெடுப்பதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருது மலுமலர்ச்சி மன்றம் எனும் அமைப்பு இப்பிரதேச இளைஞர்களையும் புத்திஜீவிகளையும் பொது அமைப்பினரையும் அணி திரட்டி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தது. இதற்காக ஆர்ப்பாட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதேவேளை 2010 ஆம் ஆண்டு முற்பகுதியில் இம்மன்றத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் அதாஉல்லா முன்னிலையில் “சாய்ந்தமருது தனி உள்ளூராட்சி சபை” பிரகடன நிகழ்வு ஒன்றும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டிருந்தது. இதன்போது அமைச்சர் அதாஉல்லா அவர்கள் இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கான அத்தனை முயற்சிகளையும் தான் மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.

அப்போது மு.கா. இதனை தீவிரமாக எதிர்த்து கல்முனைக்குடி மக்கள் மத்தியில் பிரதேசவாதத்தை தூண்டியதுடன் கல்முனைத் தொகுதியை கூறு போடுவதற்கும் கல்முனை மாநகர சபையை தமிழர்களிடம் தாரை வார்ப்பதற்கும் அமைச்சர் அதாஉல்லா எத்தனிக்கிறார் என்றும் குற்றம் சுமத்தியதுடன் ஹக்கீம் மூலம் அரச உயர் மட்டத்திலும் எதிர்ப்பை வெளியிடப்பட்டது.

இதனால் அமைச்சர் அதாஉல்லா, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை எதிர்க்கின்ற மு.கா. அரசியல்வாதிகளின் உடன்பாட்டைப் பெற்றுக் கொள்ளுமாறும் சாய்ந்தமருதுக்கு அது தேவையாயின் ஊரின் ஒட்டுமொத்த சமூகத்தினதும் ஏகோபித்த கோரிக்கையாக இதனை முன்னெடுக்குமாறும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஹரீஸ் எம்.பி. அப்போதைய மு.கா. மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் உள்ளிட்ட அரசியல்வாதிகளுடன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இதன்போது அரசியலில் புதிதாக நுழைந்து கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த சிராஸ் மீராசாய்வுடன் இம்மன்றத்தினர் தொடர்பை ஏற்படுத்தி ஆதரவு கோரியதுடன் இக்கோரிக்கையை வலுப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறும் அழைப்பு விடுத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்டு அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்திருந்த சிராஸ், இறுதி நேரத்தில் அச்சந்திப்பைத் தவிர்த்துக் கொண்டு அவரது வருகைக்காக காத்திருந்த பிரமுகர்களை ஏமாற்றிரியது மட்டுமல்லாமல் இக்கோரிக்கை தொடர்பில் தன்னால் உடன்பட்டு செயற்பட முடியாது என்றும் தான் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் அக்கடசியையோ ஏனைய ஊர்களையோ பகைத்துக் கொள்ள முடியாது என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருந்தார்.

சில மாதங்களில் அவர் சொன்னது போலவே கல்முனை மாநகர சபை தேர்தலின் போது உள்ளூராட்சி சபையை பணயமாக வைத்து மேயர் எனும் அரியாசனத்தில் அமர்ந்து கொண்டார். இதற்காக சாய்ந்தமருதின் வரலாற்றுத் தேவையான தனி உள்ளூராட்சி சபையை மேயர் பதவிக்காக விலை பேசியிருந்தார். இந்த வரலாற்று துரோகத்தை அவரால் மறுக்க முடியுமா?

இப்படி தனது பதவி மோக சுயநலனுக்காக ஊரைக் காட்டிக் கொடுத்து- இந்த ஊர் மக்களின் அபிலாஷையை குழிதோண்டிப் புதைத்த சிராஸ், இன்று தனி உள்ளூராட்சி சபை தொடர்பில் மற்றோருக்கு பாடம் சொல்லிக் கொடுக்க புறப்பட்டிருப்பது வேடிக்கையான ஒரு விடயமாகும்.

இரண்டு வருட நிறைவில் உடன்பாட்டை மீறி மேயர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து கட்சியினால் தூக்கி வீசப்பட்ட இந்த சிராஸ், அதாஉல்லாவிடம் அடைக்கலம் புகுவதற்காக தனி உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை கோஷமாக்கிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட முனைந்தார்.

மேயர் பதவியை இழக்காமல் இன்றும் அப்பதவியில் நீடித்திருந்தால் சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை ஒன்று வேண்டும் என்று சிராஸ் மூச்சு விட்டிருப்பாரா? மேயர் ஆசனத்தில அமர்ந்திருந்தபோது சாய்ந்தமருது நகர சபைக்கான பிரேரணையை நிறைவேற்றி வைக்குமாறு இவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போது, அது என் கழுத்து போகும் விவகாரம் என்றார். அப்போது மு.கா. சாய்ந்தமருது நகர சபையை எதிர்த்து வந்ததாலேயே இவர் அடங்கிப் போயிருந்தார்.

பிரேரணைதான் கொண்டு வர முடியா விட்டாலும் கல்முனை மாநகர சபைக்குள் சாய்ந்தமருதுக்கு ஒரு தனியான நகர சபை வழங்க முடியும் என்கிற ஒப்புதல் கடிதம் ஒன்றையாவது ரகசியமாகவேனும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அனுப்பி வைத்திருக்கலாம். அதைக் கூட செய்வதற்கு அவரிடம் திராணி இருக்கவுவில்லை, ஊர்ப்பற்று இருக்கவுமில்லை.

இத்தகைய அரசியல் வங்குரோத்து நிலையில் பதவி மோகத்தை தலையில் சுமந்து கொண்டு அலைகின்ற ஒரு சுயநலவாதி, சமூக சிந்தனை, ஊர்ப்பற்று எனும் விடயத்தில் ஜெமீலை விமர்சிப்பதற்கு அவரது கால் தூசுக்கும் இந்த சிராஸ் இவர் பெறுமதியற்றவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

2010 ஆம் ஆண்டு சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் மறுமலர்ச்சி மன்றத்தினர் ஜெமீலை சந்தித்து பேசியபோது அதற்கு, தான் முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அது பற்றி பேசி, அவரை இணங்க வைத்து மு.கா.வின் ஊடாக அக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கு, தான் முன்னிற்பதாக உறுதியளித்தது மட்டுமல்லாமல் உடனடியாகவே செயலில் இறங்கினார்.

அதன் பெறுபேறுதான் பிற்காலத்தில் ரவூப் ஹக்கீம் இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக பொறுப்பேற்றார் என்பதை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் சிராஸ் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மு.கா. பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரியவை அமைச்சர் ஹக்கீம் தலைமையில் சந்தித்து இது விடயமாக பேசியபோது, கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அதனை நிறைவேற்றித் தருவதற்கு சில முக்கிய ஆவணங்களைக் கோரினார். அவற்றுள் ஒன்று கல்முனை மாநகர சபையின் ஒப்பதல் கடிதம், இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் ஒப்புதல் கடிதம். ஏனைய ஆவணங்களை பிரதேச செயலாளர் சலீம் அவர்கள் தயார் செய்து சமர்ப்பித்திருந்தார்.

அந்த இரண்டு ஒப்புதல் ஆவணங்களையும் பெற்றுத் தருவதாக மு.கா. பொறுப்பேற்று விட்டு காலத்தை இழுத்தடித்தது மாத்திரமல்லாமல் பள்ளிவாசல் தலைவரின் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்காமல் தலைமறைவாகியிருந்தார்கள். அதனால் ஆத்திரமடைந்த பள்ளிவாசல் உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு மு.கா.வின் முகத்திரையை கிழித்திருந்தது.

அவ்வேளையில் மு.கா. தலைமையின் இரட்டை வேடத்தை உணர்ந்து கொண்ட அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினராக இருந்த ஜெமீல் கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு தனியான நகர மன்றத்தை ஏற்படுத்துமாறு கோரி தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்து, நிறைவேற்றியதுடன் சபையின் தவிசாளரிடமிருந்து உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய கோரியிருந்த ஆவணத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

மாகாண சபையில் அப்பிரேரணை சமர்ப்பிப்பதை மு.கா. தலைமை விரும்பாத போதிலும் அதனை மீறி ஊருக்காக தனது பதவியை துச்சமென மதித்து, அப்பிரேரணையை சமர்ப்பித்து நிறைவேற்றினார். மு.கா. தலைமையின் உத்தரவினால் மு.கா. உறுப்பினர்கள் எவரும் இப்பேரையை ஆதரிக்க முன்வராத போது மாற்றுக் கட்சிகளின் உறுப்பினர்களின் உதவியுடனேயே பிரேரணையை ஜெமீல் நிறைவேற்றினார். இந்த துணிச்சலும் ஊர்ப்பற்றும் சிராசிடம் இருந்திருந்தால் அவர் மாநகர மேயராக இருந்தபோதே ஒரு ஒப்புதல் கடிதத்தை எழுதி வைத்திருக்க முடியும். அவ்வாறு ஒரு ஒப்புதல் கடிதம் இருந்திருக்குமானால் வேறு எந்த அரசியல் பலமும் தேவைப்பட்டிருக்காது. கரு ஜெயசூரிவின் 180 நாள் பதவிக் காலத்திலேயே நகர சபை கசெட் பண்ணப்பட்டிருக்கும்.

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் மு.கா.வை ஏற்றுக் கொள்ள செய்தது தொடக்கம் கிழக்கு மாகாண சபையின் ஒப்புதல் கடிதத்தை பிரேரணை நிறைவேற்றிக் கொடுக்கும் வரையான பல ஆக்கபூர்வமான வேலைகளை ஜெமீல் செய்திருக்கிறார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஜெமீல் இணைந்து கொள்ளும்போது, தனக்கு எதுவும் வேண்டாம், தேசியப் பட்டியலும் வேண்டாம், சாய்ந்தமருது நகர சபையை பெற்றுத் தந்தாள் போதும், நானும் இவ்வூர் மக்களும் உங்களுடன் என்றும் இணைந்திருப்போம் என்றே கூறியிருந்தார்.

அதனை அமைச்சர் ரிஷாத் கடந்த பொதுத் தேர்தலில் தனது மேடையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் என்று சிராசே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் இன்றும் அமைச்சர் ரிஷாதிடம் அதனை வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார். அமைச்சர் ரிஷாதும் அது தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவை நேரடியாக சந்தித்து எழுத்து கோரிக்கை விடுத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனை சிராஸ் அறியாமலும் இல்லை.

ஜெமீல் என்னிடம் தேசியப்பட்டியல் கேட்கவில்லை, நகர சபையே கேட்டார் என்று அமைச்சர் ரிஷாத் பகிரங்கமாக கூறியதை சிராஸ் இப்போது ஞாபகப்படுத்துகின்றார் என்றால் அவரது குற்றச்சாட்டுக்கு அவரே பதிலும் தந்துள்ளார். ஜெமீல் அன்றே நகர சபை விடயத்தில் உறுதியாக இருந்தார் என்று அமைச்சரினதும் சிராசினதும் கூற்றுகள் உறுதிப்படுத்துகின்ற நிலையில் ஜெமீல் ஊரா கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓத முற்படுகிறார் என்று சிராஸ் கூறுவதன் அர்த்தம் என்ன? அரசியலில் விரக்தியடைந்து தான் என்ன பேசுகின்றேன் என்பது கூட தெரியாமல் அவர் குழம்பிப் போயுள்ளார் என்றே நாம் கருதுகின்றோம். உண்மையில் ஊரா கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதிப் பழகியவர் சிராஸ் என்பதை ஊர் மக்கள் அறிவார்கள்.

இப்போது அரசியல் போக்கிடமின்றி வேறு வழி தெரியாமல் மு.கா.வில் இணைவதற்கு பின் கதவினால் அக்கட்சி முக்கியஸ்தர்களிடம் மண்டியிட்டுக் கிடக்கின்ற இவர், ரவூப் ஹக்கீமுக்கு வால் பிடிப்பதற்காகவே ஜெமீலை விமர்சிக்கிறார். ஏனெனில் ஜெமீலின் வேகமான செயற்பாடுகள் காரணமாக சாய்ந்தமருது உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள மு.கா.வின் முக்கிய கோட்டைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பக்கம் சாய்ந்து, நாளுக்கு நாள் மக்கள் அக்கட்சியில் அணி திரள ஆரம்பித்திருப்பதானது மு.கா.வினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம்’ என்பது போல் சிராஸ் காய் நகர்த்துகின்றார்.
மு.காவில் அவரை இணைப்பதற்கான தேவையை உணர்த்தவே ஜெமீலை வசை பாடுகின்றார்.

கலாநிதி ஜெமீலின் மூலம் அரசியல் முகவரி பெற்று அவரை வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தி வந்துள்ள சிராஸ், இப்போதும் ஜெமீல் என்கிற நாமம் இல்லாமல் தன்னுடைய அரசியலை நகர்த்த முடியாத வங்குரோத்து நிலையில் இருக்கிறார். சதிகாரர்களுக்கு எல்லாம் சதிகாரனாக இறைவன் இருக்கிறான் என்பதை சிராஸ் ஒருபோதும் மறந்து விடக் கூடாது” என்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பனர் ஏ.எம்.எம்.தில்ஷாத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY