ஆட்சியாளர்களினாலேயே இன்று தொழிலாளர்கள் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்: அப்துர் ரஹ்மான்

0
112

fc93f9f0-9c8d-461b-810f-9e84eae6204dஅரசாங்கங்களினாலும், ஆட்சியாளர்களினாலுமே இன்று தொழிலாளர்கள் அதிகம் சுரண்டப்படுகிறார்கள். இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய தொழில் சங்கங்கள் கூட அரசியல் வாதிகளினதும், கட்சிகளினதும் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளன. இவ்வருட மே தினம் நிகழ்வுகள் இதனையே காட்டுகின்றன. தொழிற் சங்கங்கள், தொழிலாளர்களின் நலன்களை முதன்மைப்படுத்தி இயங்குகின்ற வகையில் அரசியல் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுயாதீனமானவர்களாக இயங்கத் தொடங்க வேண்டும்.” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நடாத்திய மேதின நிகழ்வு காத்தான்குடியில் நடை பெற்ற போது அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

“130 வருடங்களுக்கு முன்னர் சிகாகோ நகரத்தில் நடந்த தொழிலாளர்கள் புரட்சியினையும் அதன் வெற்றியினையும் நினைவு கூறுவதாகவே மேதின நிகழ்வுகள் உருவாகின. அன்றைய சூழ்நிலையில் தொழிலாளர்களின் உழைப்பையும், நலன்களையும் சுரண்டிக் கொண்டிருந்த முதலாளி வர்க்கத்திற் கெதிராகவே தொழிலாளர்கள் போராடினார்கள். 1886ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதியன்று சிகாகோ நகரில் நடந்த தொழிலாளர் உரிமைப் போராட்டத்தில் நான்கு தொழிலாளர்கள் தமது உயிர்களையே தியாகம் செய்தனர். இப்படியான போராட்டங்களினாலும் தியாகங்களினாலுமே தொழிலாளர்கள் தமது உரிமைகளையும் நலன்களையும் வென்றெடுக்க முடிந்தது.

ஆனால், இன்றைய நிலையில் மே தினம் என்பது தொழிலாளர்களுக்குரிய நிகழ்வுகளாக அல்லாமல் கட்சிகளின் நலன்களைப் பாதுகாத்து அவர்களின் அரசியல் பலத்தை நிரூபிப்பதற்கான கூட்டங்களாகவே மாறிப்போயிருக்கின்றன. இவ்வருட மே தின நிகழ்வும் இதனையே எடுத்துக் காட்டுகின்றது.

இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்தினாலும், ஆட்சியாளர்களினாலுமே தொழிலாளர்கள் அதிகம் சுரண்டப்படுகிறார்கள். அதிகரித்த வரிகள், பொதுப் பணத் துஸ்பிரயோகமும், அரசியல் வாதிகளின் வீண் விரயமும் ஆடம்பரங்களும் என பல வழிகளில் தொழிலாளர்களின் உழைப்பு இந்த நாட்டில் சுரண்டப் படுகிறது. இருப்பினும் இங்குள்ள துரதிஸ்டம் என்னவென்றால் தம்மைச் சுரண்டுகின்ற ஆட்சியாளர்களக்கு விசுவாசமானவர்களாகவும், அவர்களின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றவர்களாகவும் தொழிற் சங்கங்கள் மாறியுள்ளன. இந்த நிலை மாற வேண்டும். தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களை முதன்மைப்படுத்தி இயங்குகின்ற வகையில் அரசியல் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுயாதீனமானவர்களாக இயங்கத் தொடங்க வேண்டும்.

முதலாளிமார் மாத்திரமின்றி அரசாங்கம் அரசியல் கட்சிகள் என யாரெல்லாம் தொழிலாளர்களின் நவன்களுக் கெதிராக இருக்கின்றார்களோ அதற்கெதிராக தணிச்சலுடன் குரல் கொடுக்கின்ற சுயாதீனம் கொண்டவர்களாக தொழிற்சங்கங்கள் மாற வேண்டும்.

காத்தான்குடிப் பிரதேசத்திலும் சுயாதீனமான தொழிற்சங்கங்கள் உருவாக வேண்டும். அந்த வகையில் நல்ல கட்டமைப்புடன் இயங்குகின்ற ஆட்டோ சங்கத்தை நான் பாராட்டுகின்றேன். நமது பிரதேச தொழிலாளர்கள் சார்பாக பேசப்பட வேண்டிய ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சுயாதீனமாக பேசக்கூடிய சகல துறை தொழிலாளர்களையும் ஒன்றிணைத்த ஒரு பலமான தொழிற் சங்கம் இந்த மண்ணில் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான முழு ஒத்தாசைகளையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.”

LEAVE A REPLY