மத்திய கல்வி அமைச்சின் பணிப்புரையை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு நிராகரிப்பு

0
392

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

C. Thandayuthapaniகிழக்கு மாகாணத்தில் நண்பகல் 12.00 மணியுடன் பாடசாலைகளை மூடுவதைக் கைவிடுமாறு மத்திய கல்வி அமைச்சு கேட்டிருந்த போதிலும் அதனை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது.

பாடசாலை நேரத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை. வழமை போன்று பாட நேர அட்டவணைகளுடன் பாடசாலை நடைபெற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நேற்று புதன்கிழமையும் மாகாணப் பாடசாலைகள் நண்பகல் 12.00 மணியுடன் மூடப்பட்டன.

நாளை (06) வெள்ளிக்கிழமை வரை மாகாண பாடசாலைகள் நண்பகல் 12.00 மணியுடன் மூடப்படும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த முடிவை மறுதலிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு காரணமாக கல்வி அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் குழப்பமடைந்தவர்களாக காணப்பட்டனர்.

இது தொடர்பாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘மாகாண சபைகளுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தியே நண்பகல் 12.00 மணியுடன் கிழக்கு மாகாண பாடசாலைகளை மட்டும் மூடிவிட முடிவு எடுக்கப்பட்டடது.

மாணவர்களின் உடல் ஆரோக்கியம் கருதி கல்வி அதிகாரிகள், பெற்றோர் மற்றும் அமைப்புக்கள் என்று பலரது ஆலோசனைகளும் பெறப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட இந் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. இதற்கான முழுப் பொறுப்பையும் மாகாண கல்வி அமைச்சர் என்ற ரீதியில் நான் ஏற்கின்றேன்.

மாகாண கல்வி அமைச்சு எடுத்துள்ள இந்த முடிவு குறித்து மத்திய கல்வி அமைச்சு கொண்டுள்ள நிலைப்பாடு பற்றி நான் அதிகாரபூர்வமாக இதுவரையில் எதுவும் அறியவில்லை. மத்திய அமைச்சு அதிகாரிகளும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.

மத்திய கல்வி அமைச்சு கொண்டுள்ள இந்த நிலைப்பாட்டை பெரிதாகக் கருதவில்லை. இருப்பினும் மத்திய கல்வி அமைச்சு இதனை ஏன் பெரிதுபடுத்துகிறது என்றும் புரியவில்லை’ என்றாரவர்.

LEAVE A REPLY