மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட எல்ரீரீஈ இயக்க முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளரை அவரது மனைவி கொழும்பில் நேரில் நலம் விசாரிக்க அனுமதி

0
147

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

praba-krishnapillaiமட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட எல்ரீரீஈ அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வு பொறுப்பாளரான பிரபா எனப்படும் கிருஸ்ணபிள்ளை கலைநேசனை (வயது 46) அவரது மனைவி கொழும்புக்குச் சென்று நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

கடந்த திங்கட்கிழமை 02.05.2016 காலை மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ள கலைநேசன் தற்சமயம் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

விசாரணைக்கு முகம்கொடுத்து வரும் தனது கணவருடன் ஏற்கெனவே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க தான் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08.05.2016 கலைநேசனை நேரில் சென்று பார்த்து நலன் விசாரிக்க காத்தான்குடி பொலிஸாருக்கூடாக செவ்வாய்க்கிழமை மாலை அவரது மனைவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மட்டக்களப்பிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டதனூடாக கொழும்பிலுள்ள மனித உரிமை ஆணைக்குழு தலைமையகமும் இந்த விடயத்தில் அக்கறை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னிப் பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட கலைநேசன், புனர்வாழ்வளிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகின்றது.

LEAVE A REPLY