அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
360

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Untitled44அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீடினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவ்விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அக்கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் குருநாகலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சிக்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இதன்போது புதிய செயலாளராக சுபைதீன் ஹாஜியார் என்பவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த மாநாடு கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டது எனவும் அதனால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் செல்லுபடியற்றது எனவும் உத்தரவிடக்கோரி அதன் முன்னாள் செயலாளர் நாயகமான வை.எல்.எஸ்.ஹமீட் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு முதற் தடவடியாக கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இன்று மே 03ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி அதனை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தவிசாளரான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, புதிய செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் , முன்னாள் தேசிய அமைப்பாளரான ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீத், முன்னாள் தேசிய கொள்கை பரப்பு செயலாலளர் முபாரக் அப்துல் மஜீத் மௌலவி உள்ளிட்ட 15 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY