என்னவாகும் “யாகூ”வின் எதிர்காலம்?

0
205

Yahooசமீபகாலங்களாக யாகூ பற்றி வரும் செய்திகள் அனைத்தும் நல்லவைகளாக இல்லை. யாகூ குறித்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் சிக்கலை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.

இப்போது மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாகவே இந்த நிறுவனம் கடும் சிக்கலில் இருக்கிறது. தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலையில் நியமனம் செய்யப்பட்டார்.

அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் ஐந்து தலைமைச் செயல் அதிகாரிகள் மாற்றப்பட்டு மரிஸா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு அப்போது வரவேற்பு இருந்தது. காரணம் அவரது புரபைல் அப்படி, ஆனாலும் அவரால் கூட அந்த நிறுவனத்தின் திசையை மாற்றமுடியவில்லை. இப்போது யாகூவை வாங்க 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியில் இருக்கின்றன.

மரிஸா ஸ்டான்போர்டில் படித்தவர். அங்கு படித்து முடித்தவுடன் பல நிறுவனங்களில் ஆஃபர் இருந்தாலும் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தின் முதல் பெண் என்ஜினீயர், கூகுள் நிறுவனத்தின் 20-வது பணியாளர்கள். கூகுள் நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததால் யாகூ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய முந்தைய பணி அனுபவங்கள் எதுவும் இவருக்கு கைகொடுக்கவில்லையா அல்லது யாகூ என்பது நேற்றைய வெற்றிக்கதையா என்பதற்கு இன்னும் முடிவு கிடைக்காமல் இருக்கிறது.

யாகூ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவுடன் அவர் பல முக்கியமான முடிவுகளை எடுத்தார். ஆனால் அவரின் பல முடிவுகள் கடும் சர்ச்சையை உருவாக்கியது.

யாகூ நிறுவனம் மொபைலில் கவனம் செலுத் தாமல் இருந்தது. அதனால் இவர் பொறுப்புக்கு வந்தவுடன் மொபைல் சார்ந்த வியாபாரத்தில் கவனம் செலுத்தினார். அந்த துறையில் இருந்த சில நிறுவனங்களை வாங்கவும் செய்தார். இந்த நிறுவனங்கள் பேஸ்புக்,ட்விட்டர் போல இருக்கும் என்று நினைத்து சில நிறுவனங்களை வாங்கினார். ஆனால் அந்த நிறுவனங்களின் வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

தவிர டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதிலும் முதலீடு செய்து பல பிரிவுகளை உருவாக்கினார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் 1,600 நபர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இதில் பெரும்பாலும் மீடியா மற்றும் விற்பனை பிரிவுகள் நபர்கள்தான் அதிகம். யாகூ ஆட்டோ, யாகூ ஹெல்த், யாகூ டிராவல், யாகூ ரியல் எஸ்டேட், யாகூ மேக்கர்ஸ் ஆகியவை மூடப்பட்டன. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் நீக்கப்பட்டனர். அதேபோல வெளிநாடுகளில் உள்ள சில கிளைகளையும் இந்த நிறுவனம் மூடியது.

மரிஸா பதவி ஏற்றவுடன் முக்கிய பதவிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்தார். அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்று அவர்களை வேலையை விட்டும் நீக்கினார். தவிர கடந்த ஒரு வருடத்தில் பல பிரிவுகளின் முக்கியத் தலைவர்களும் வெளியேறினர். முக்கிய அதிகாரிகள் வெளியேறும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்தது.

தலைமைச் செயல் அதிகாரி யுத்திகள் வகுக்க வேண்டுமே தவிர, மைக்ரோமேனேஜ் செய்யக் கூடாது என்று அங்கிருந்து வெளியேறியவர்கள் கூறுகிறார்கள். ஊழியர்களின் ஊதிய உயர்வு, சிறிய ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக இருந்தாலும் அவரே கவனம் செலுத்தினார். இதிலேயே அவரது பெரும்பாலான நேரம் வீணாகியது, தவிர ஒரு முடிவெடுப்பதற்கு பலவிதமான வாய்ப்புகளையும் ஆராய அதிக காலம் எடுத்துக்கொண்டார் என்றும் நிறுவனத்தை விட்டு வெளியேறியவர்கள் கூறுகிறார்கள். இதனால் சரியான புராடக்டுகளை உருவாக்க முடியவில்லை.

அமெரிக்க தேடுபொறி சந்தையில் யாகூவின் பங்கு 12.7 சதவீதம்தான். மரிஸா பதவி ஏற்கும் போதும் இதே அளவில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் முடிவுகள் காலதாமதமாக எடுப்பது, முடிவெடுக்காமல் இருப்பது உள்ளிட்ட நிர்வாக கோளாறுகளால் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது. மரிஸா பொறுப்பேற்ற பிறகு பங்குவிலை தொடர்ந்து உயர்ந்தது. ஆனாலும் கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கு கடுமையாக சரிந்தது.

இதனால் முதலீட்டாளர்களின் அதிருப்தி தொடர்ந்தது. ஸ்டார்போர்டு வேல்யூ என்னும் ஹெட்ஜ் பண்ட் யாகூ நிறுவனத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படையாக அறிவித்தது. 1.7 சதவீத பங்குகளை வைத்திருக்கும் இந்த நிறுவனம் 2014-ம் ஆண்டு முதலே யாகூ இயக்குநர் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. மரிஸாவால் நிறுவனத்தை மாற்ற முடியவில்லை என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

யாகூ நிறுவனம் சீன நிறுவனமான அலிபாபாவிலும், யாகூ ஜப்பானிலும் முதலீடு செய்திருக்கிறது. அந்த பங்குகளை விலக்கிகொள்ள சிறுமுதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதில் வரி தொடர்பான பிரச்சினைகள் இருப்பதால் அந்த பங்குகளை விலக்கிகொள்ள முடியாது என்று நிறுவனம் தெரிவித்துவிட்டது.

தவிர ஸ்டார்போர்டிடம் குறைவான பங்குகள் இருந்ததால், அந்த நிறுவனத்தின் கருத்துகளுக்கு மரிஸா முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நீண்ட நாட்களாக நடந்து வந்த போராட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இயக்குநர் குழுவில் அந்த நிறுவனத்துக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அடுத்து என்ன?

இயக்குநர் குழுவில் புதியவர்கள் சேர்ந்தாலும் நிறுவனம் விற்கப்படுவதற்கே வாய்ப்பு அதிகம். இந்த நிறுவனத்தை வாங்க 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. வெரிசான், ஒய்பி ஹோல்டிங்க்ஸ், டிபிஜி, பெயின் கேபிடல், விஸ்தா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாங்க திட்டமிட்டிருக்கின்றன. அதிகபட்சமாக 800 கோடி டாலர் கொடுக்க ஒரு நிறுவனம் முன் வந்திருப்பதாக புளும்பெர்க் தெரிவித்தது.

ஆனால் 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,500 கோடி டாலர் கொடுக்க முன் வந்தது. ஆனால் அந்த டீல் அப்போது நிறைவேறவில்லை.

2000-ம் ஆண்டு தொடக்கத்தில் யாகூ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 25,500 கோடி டாலராக இருந்தது. அப்போதிலிருந்து சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்து இப்போது 3,400 கோடி டாலராக இருக்கிறது. 3,400 கோடி டாலராக இருந்தாலும் ஆசிய சந்தையில் உள்ள நிறுவனங்களின் முதலீடும் சேர்த்துதான் இந்த சந்தை மதிப்பாகும். அதாவது யாகூவின் இன்டர்நெட் தொழிலுக்கு பெரிய மதிப்பு இல்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

மரிஸாவின் நிலை?

எதாவது ஒரு நிறுவனம் வாங்கும் பட்சத்தில் மரிஸா நீக்கப்படலாம். ஒரு வேளை நீக்கப்பட்டால் 5.5 கோடி டாலர் நிறுவனம் கொடுக்க வேண்டி இருக்கும்.

நிறுவனம் யார் கைக்கு சென்றாலும் மரிஸாவுக்கு லாபம்தான். ஆனால் நிறுவனம். தொழில் நுட்ப மாற்றத்தால் காணாமல் போன நிறுவனங்களின் பட்டியலில் யாகூ இருக்குமா அல்லது மீண்டு வருமா என்பது யார் வாங்கப்போகிறார்கள். அடுத்து யார் நிர்வாகம் செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்ததுதான்.

#TheHindu

LEAVE A REPLY