20 ஓவர் உலக கிண்ண போட்டி தோல்விக்கு அப்ரிடியே காரணம்: வக்கார் யூனிஸ்

0
180

201604290737155982_Afridi-Twenty20-World-Cup-competition-due-to-failure-Waqar_SECVPFஇந்தியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரே ஒரு வெற்றியை (வங்காளதேசத்துக்கு எதிராக) மட்டும் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இதேபோல் வங்காளதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 2 வெற்றி மட்டும் கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

20 ஓவர் உலக கிண்ண போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வக்கார் யூனிஸ் விலகினார். கேப்டன் அப்ரிடியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2 ஆண்டு கால தனது பயிற்சியாளர் பதவியின் போது பாகிஸ்தான் அணி வீரர்களின் செயல்பாடுகள் குறித்து வக்கார் யூனிஸ் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அறிக்கை அளித்து இருக்கிறார். அந்த அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் சில தகவல்கள் கசிந்து இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

20 ஓவர் உலக கிண்ண, 20 ஓவர் ஆசிய கிண்ண போட்டி மற்றும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர்களில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு கேப்டன் பதவியில் அப்ரிடி சரியாக செயல்படாததே காரணமாகும். பல ஆட்டங்களில் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியதுடன், கேப்டன் பொறுப்பிலும் சரியான முறையில் செயல்படவில்லை. அவரது மோசமான ஆட்ட வியூகம் அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் தோல்விக்கு பிறகு வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய போது கேப்டன் சொன்ன பல ஆலோசனைகள் தங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதாக வீரர்கள் புகார் தெரிவித்தனர். அப்ரிடி, அணி வீரர்களின் ஆலோசனை கூட்டங்கள் சிலவற்றில் கலந்து கொள்ளவில்லை. சில நேரங்களில் பயிற்சியில் பங்கேற்காமலும் தவிர்த்தார். கேப்டன் என்பவர் அணியின் முன் மாதிரியாக திகழ வேண்டும். ஆனால் இதுபோன்று மோசமாக நடந்து கொள்ளக்கூடாது.

உமர் அக்மல், அகமது ஷேசாத், அப்ரிடி ஆகியோர் அணியில் யார் பெரியவர்? என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்த எண்ணம் அணியில் உருவாகாமல் தடுக்கும் வகையில் அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு உடல் தகுதி தேர்வுக்கு ஆஜராகுமாறு உமர் அக்மலை முன்னாள் தேர்வு குழு தலைவர் ஹாரூன் ரஷீத் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் அவர் யாரிடமும் சொல்லாமல் இலங்கை போட்டி தொடரை தவிர்த்து கரீபியன் லீக் போட்டியில் கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு பிறகு அவர் ஐதராபாத் சர்ச்சையில் (உள்ளூர் லீக் போட்டியில் விளையாடுகையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார்) சிக்கினார். இருப்பினும் அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்தது. இதன் மூலம் எந்த தகுதியின் அடிப்படையில் வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ், இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் ஆகியோர் திறமையான வீரர்களாக இருந்தாலும் மோசமான நடத்தை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டனர். திறமை இருந்தாலும் அதன் பிறகு அவர்களுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் வாய்ப்பு அளிக்கவில்லை. இதேபோல் நடத்தை சரியில்லாத உமர் அக்மலை அணியில் இருந்து நீக்கி தைரியமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY