மே.தீவுகள் அணிக்கு ஐ.சி.சி கண்டனம்; நேபாளத்துக்கு தடை

0
148

22col6681உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டரன் சமி உட்பட அவ்வணியின் வீரர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) தனது உத்தியோகபூர்வ கண்டனத்தை வெளியிட்டுள்ளது. டுபாயில் கூடிய சர்வதேச கிரிக்கெட் சபை, அங்குவைத்தே, இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டரன் சமி, அவ்வணியின் இரசிகர்களுக்கும் சக வீரர்களுக்கும் கரீபியன் தீவுகளின் அரச தலைவர்களுக்கும் நன்றி செலுத்தியதோடு, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை மீது உச்சபட்சமான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.

அதன் பின்னர், அணியின் சிரேஷ்ட வீரரான டுவைன் பிராவோவும், அணித்தலைவரின் கருத்துகளை மீளத் தெரிவித்ததோடு, உலகிலுள்ள தொழில்முறைப் பண்புகளற்ற கிரிக்கெட் சபையென, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையை வர்ணித்ததோடு, சபையின் தலைவர் டேவ் கமரோனை, முதிர்ச்சியடையாதவர் எனவும் குறுகிய மனமுடையவர் எனவும் திமிரானவர் எனவும் வர்ணித்திருந்தார்.

ஆண்கள் தொடரை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பெண்கள் தொடரையும் வென்றதோடு, பெப்ரவரியில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தையும் வென்று, இவ்வாண்டில் 3 தொடர்களை வென்றுள்ள போதிலும், சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் வைத்து, அவ்வணிக்குக் கண்டனமே பிரதானமாகக் கிடைத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கருத்துகள், பொருத்தமற்றவை எனவும் மரியாதையற்றன எனவும் தெரிவித்த அச்சபை, நிகழ்வின் மரியாதையைக் குறைப்பனவாக அமைந்தன என அச்சபை தெரிவித்துள்ளது. அவ்வீரர்களுக்கெதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்வது குறித்து ஆராயப்பட்டதாகவும் அச்சபை குறிப்பிட்டது. அவ்வாறு குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தால், அவ்வீரர்களுக்கு அபராதமோ அல்லது தடைகளோ அல்லது இரண்டுமோ கிடைத்திருக்கும்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் நிகழ்வுகளில் இவை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நடத்தை கிடையாது எனத் தெரிவித்த அச்சபை, இவ்விடயம் தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தது.

இறுதிப் போட்டியின் நாயகனாக மார்லன் சாமுவேல்ஸ், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மீது தெரிவித்த கருத்துகள் தொடர்பாகவும் ஏனைய கருத்துகள் தொடர்பாகவும் தனித்த விமர்சனங்களை முன்வைத்த சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் ஷஷாங் மனோகர், வெற்றியிலும் தோல்வியிலும் பெருந்தன்மையுடன் நடப்பதையும் மதிப்புடன் நடப்பதையும் பெருமைமிகு வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேபாளத்துக்குத் தடை

இதேவேளை, இடம்பெற்றுவரும் கூட்டங்களின்போது, நேபாள கிரிக்கெட் சங்கத்தைத் இடைக்காலத்தடைசெய்யும் முடிவை, சர்வதேச கிரிக்கெட் சபை எடுத்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் சபையைக் கலைத்து, தற்காலிகச் செயற்குழுவொன்றை அமைப்பதற்கு, நேபாளத்தின் தேசிய விளையாட்டுச் சபை எடுத்த முடிவைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இடைக்காலத்தடை செய்யப்பட்டுள்ள காலத்திலும், சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, நேபாள அணிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY