பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றோரே… உங்களோடு ஒரு நிமிடம்.

0
209

முஸ்தபா முர்ஸிதீன்
(ஶ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகம்)

BUP_DFT_DFT-10-52உங்களது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் இது. எதிர்கால நடவடிக்கைகளை, தொழில் வாய்ப்புக்களை எவ்வாறான துறை சார்ந்து அமைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளீர்கள். இவ்வாறான ஒரு தருணத்தில் பல்கலைக்கழக பாட நெறிகளை தெரிவு செய்வது மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை தொடர்பாக ஒரு சில முக்கியமான விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வது பயனளிக்கும் என நினைக்கிறேன்.

இம்முறை 26,000 க்கும் அதிகமான மாணவர்கள் 90 க்கும் அதிகமான பாட நெறிகளுக்கு 14 அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பல்கலைக்கழக அனுமதி என்பது இறைவனால் உங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இலங்கையை பொறுத்தவரை 1%க்கும் குறைவானவர்களே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர். அந்த 1%க்குள் நாம் இருப்பதை இட்டு முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

நீங்கள் ஒரு பாட நெறியை தெரிவு செய்யும் போது உங்களது வெட்டுப்புள்ளியை மட்டும் வைத்து அந்த பாடநெறியை அடையக்கூடியதாக இருக்குமா என்று பார்ப்பதை காட்டிலும் அந்த பாடநெறி தொடர்பான தொழில் வாய்ப்புக்கள், மற்றும் அது தொடர்பாக காணப்படக்கூடிய சவால்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்துதல் அவசியமாகும். அத்தோடு பல்கலைக்கழகங்களிலும், அது சார்ந்த பீடங்களிலும் உள்ள வேறுபாடுகள் தொடர்பாக அறிந்திருப்பதும் அவசியமாகும். நீங்கள் எந்த பல்கலைக்கழகத்தில், எவ்வாறான தரத்துடன் உங்களது பட்டப்படிப்பை முடிக்கிறீர்கள் என்பதை வைத்தே போட்டிமிக்க தொழிற்சந்தையில் நீங்கள் தரப்படுத்தப்படுகிறீர்கள்.

எல்லோரும் இவ்வாறுதான் பாடநெறிகளையும், பல்கலைக்கழகங்களையும் தெரிவு செய்கிறார்கள் என்று நீங்களும் அவ்வாறு தெரிவு செய்துவிட்டு அமைதியாய் இருந்துவிடாதீர்கள். ஏற்கனவே இது தொடர்பாக அனுபவம் உள்ளோரிடம் ஆலோசனைகளை பெற்றிடுங்கள். அதன் பிற்பாடு உங்களது அறிவு, மனப்பாங்கு, திறன்கள், தொழில்வாய்ப்பு, அந்த தொழிற்துறையில் வேலைசெய்யக்கூடிய இயலுமை, குடும்ப வருமான பின்னணி மற்றும் உங்களது விருப்பம் என்பவற்றுக்கு ஏற்ப பாட நெறிகளையும், பல்கலைக்கழகங்களையும் தெரிவு செய்திடுங்கள்.

குறிப்பாக பெண்கள் உங்களது பாதுகாப்பையும், மார்க்கவரையறைகளையும் பேணிப்பாதுகாக்க கூடிய பல்கலைக்கழகங்களையும், பேணிப்பாதுகாத்து வேலையாற்றக்கூடிய பாடநெறிகளையும் தெரிவு செய்திடுங்கள். இன்று பெரும்பாலான பெண்கள் திருமணத்தின் காரணமாக பட்டப்படிப்பை இடை நடுவில் விடுவோராகவும் அல்லது பட்டப்படிப்பை முடித்து அதன் பிற்பாடு கிடைக்கும் வேலை வாய்ப்பை இடை நடுவில் விடுவோராகவுமே உள்ளனர் அல்லது இன்னும் சிலர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்து, கிடைக்கக்கூடிய பாட நெறிக்கு பதிவு செய்த பிறகு போகாமல் விட்டு விடுகிறார்கள்.

இப்படியானவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இன்னுமொருவரின் பல்கலைகழக அனுமதியை வீணடிக்கிறீர்கள். யாரோ ஒருவர் உங்களுக்கு பிறகு அந்த இடத்திக்கு காத்திருக்க நீங்களோ கிடைத்த அந்த வாய்ப்பை தட்டிக்கழிக்கிறீர்கள். இப்படியானவர்கள் முன்கூட்டியே சிந்தித்து பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதோடு நிறுத்திவிடுங்கள். பல்கலைகழக பதிவை மேற்கொள்ள வேண்டாம். அந்த வாய்ப்பை வேறு ஒரு தேவை உடையோர் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

இலங்கையில் உள்ள பல்கலைகழகங்களை பொறுத்தவரை அங்கு அதிகமானவர்கள் முஸ்லிம் அல்லாதோரே. எனவேதான் பல்கலைகழக நுழைவிற்கு பிறகு பொறுப்புள்ள ஒருவராக நீங்கள் மாறுகிறீர்கள். உங்களால் செய்யப்படும் எந்த ஒரு செயலும் ஒரு சமூகத்தின் செயலாகவே அந்நிய மதத்தவர்களால் பார்க்கப்படுகிறது. நீங்கள்விடும் ஒவ்வொரு தவரும் உங்களது பெயரை வைத்து சுட்டிக்காட்டப்படுவதை விடுத்து உங்களது மார்க்கத்தையும், சமூகத்தையும் கொண்டே சுட்டிக்காட்டப்படும். உதாரணமாக நீங்கள் ஒரு தவறை செய்யும் போது அது மற்றோரால் ஒரு முஸ்லிம்தான் இதைச் செய்தான் அல்லது ஒரு தமிழன்தான் இதைச்செய்தான் என்றுதான் சுட்டிக்காட்டப்படும். எனவேதான் மற்ற மதத்தவர்களுக்கு மத்தியில் எமது மார்க்கத்தையும், எமது சமூகத்தையும் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள்.

அத்தோடு பல்கலைகழக அனுமதிக்கு பிறகு நாம் முயற்சி செய்து பாடங்களை கற்க தேவை இல்லை, அங்கு சென்றால் வாழ்க்கையை விரும்பியவாறு கழிக்கலாம், விரும்பியவாறு வாழலாம் என்பதை முதலில் உங்களின் ஆள்மனதிலிருந்து அகற்றிவிடுங்கள். அங்கு சென்றும் நீங்கள் கடினமுயற்சி செய்து படிக்கத்தான் வேண்டும், பரீட்சைகள் எழுதத்தான் வேண்டும். அங்கு நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பரீட்சையும் மிக முக்கியமானதே.

பல்கலைகழகங்களில் ஒரு பரீட்சையில் நாம் இழந்த பெறுபேறை வாழ்க்கையில் எங்கையுமே ஈடு செய்யமுடியாது. எமது பரீட்சையின் பெறுபேறுகளைக்கொண்டே எமது பட்டம் தரப்படுத்தப்படுகிறது. அந்த தரத்தை கொண்டே நாம் தொழிற்சந்தையில் தொழில் வழங்குனர்களால் தரப்படுத்தப் படுகிறோம். எனவே தொழில்வாய்ப்புக்களுக்கு சென்று அவ்விடத்தில் பலகலைக்கழக வாழ்வை வீணாக்கியதை எண்ணி நம்மை நாமே நொந்து கொள்ளாமல் பலகலைக்கழக வாழ்வை முதல் வருடத்தில் இருந்தே உங்கள் படிப்பை திட்டமிட்டு அமைத்துக் கொள்ளுங்கள். இன்னும் படிப்போடு மட்டுமே உங்கள் பல்கலைக்கழக வாழ்வை சுருக்கிக் கொள்ளாது ஏனைய திறன்களையும் வெளிக்கொணர்ந்து வளர்த்திட முயற்சி செய்யுங்கள். 4 வருட பல்கலைக்கழக வாழ்வில் நீங்கள் அடைந்து கொள்ளும் அனுபவங்களையும், ஆற்றல்களையும் வேறெங்கு சென்றுமே அடைந்திட முடியாது.

எனவேதான் மாணவர்களே..! நீங்கள்தான் நாளைய எமது சமூகத்தின் தலைவர்கள். உங்களை நீங்கள்தான் வளப்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களுக்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தரப்படலாம் ஆனால் அந்த வாய்ப்புக்களை நீங்கள்தான் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே பலகலைக்கழகத்திற்கு அனுமதி பெற உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி நாளை எமது சமூகத்திற்கும், எமது இலங்கை திரு நாட்டிற்கும் பயன்படக்கூடிய ஒரு சிறந்த வளவாளராக உருவாவதற்கு எனது வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY