Update: காத்தான்குடி பெண் பாலியல் துஸ்பிரயோகம் (மேலதிக விபரங்கள் இணைப்பு)

0
27

(விஷேட நிருபர் / பழுலுல்லாஹ் பர்ஹான்)

Arrested-kkyகாத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் சுமார் 38 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் நேற்று (25) திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் (24) ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரையம்பதி – கர்பலா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்தேக நபர்கள், சுமார் 38 வயதுடைய குறித்த பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

அத்தோடு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் குறித்த பெண் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் இரண்டு (17 மற்றும் 14 வயதுடைய) பிள்ளைகளின் தாய் ஆவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் புலனாய்வுப்பிரிவில் கடமையாற்றுவதாகவும் மற்றயவர் மட்டக்களப்பிலுள்ள பொலிஸ் நிலையத்தில் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் விசாரணை இடம் பெற்று வருவதாகவும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர்களிருவரையும் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இப் பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY