அறபுலகில் இருந்து அறிவு ஞானத்தை அன்றி அரசியலை இறக்குமதி செய்ய வேண்டாம்

0
203

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

அறபு வளை குடா நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நேச நாடுகளாகவே அவை காணப்படுகின்றன, அமெரிக்காவின் மத்திய கிழக்கிற்கான இராணுவ பொருளாதார, அரசியல் நிகழ்ச்சி நிரலில் இஸ்ரேலின் இருப்பும் பாதுகாப்பும் முதன்மையானவையாகும்.

சவூதி அறேபியா இஸ்ரவேலுடனான இராஜதந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டதாக புணையப்பட்ட செய்தியொன்று சமூக ஊடகங்களில் வளம் வருகின்றது. குறித்த ஆக்கத்தை ஊர்ஜிதம் செய்யாது வெளியிட்ட அச்சு ஊடகங்களின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.

பிராந்தியத்தில் எகிப்து, துருக்கி, ஈரான் மாத்திரமன்றி ஏனைய அறபு நாடுகளும் அமெரிக்கவுடனும் இஸ்ரவேலுடனும், ஏனைய வல்லரசுகளுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இராஜதந்திர நகர்வுகளை பேணுகின்றமை பகிரங்க இரகசியமாகும்.
(நான் சவூதிய, துருக்கிய, எகிப்திய, ஈரானிய அரசியல் வரலாறு பற்றிபேசவில்லை)
அது மாத்திரமன்றி பிராந்தியத்தில் செயற்படுகின்ற பெரும்பாலான ஜிஹாத் அமைப்புக்களும் போராளிக் குழுக்களும் அமெரிக்காவின் துருவமயப்படுத்தல் நிகழ்ச்சி நிரலில் நேரடியாகவோ மறை முகமாகவோ உள்வாங்கப் பட்டிருக்கின்றமையும் யதார்த்தமாகும்.

அண்மைக்கால பூகோல அரசியல், இராணுவ, இராஜதந்திர,பொருளாதார களநிலவரங்களை சரியான பரிமாணங்களில் உள்வாங்காது பல நண்பர்கள் தத்தமது கொள்கை முரண்பாடுகளிற்கு ஏற்ப சிறு பிள்ளைத்தனமாக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை வினோதமாக இருக்கின்றது.

சவூதி அரேபிய, துருக்கிய, இக்வானிய அரசியலை தத்தமது கொள்கை கோட்பாட்டு முரண்பாட்டு முகாம்களிற்கு ஏற்ப ஆதரவாகவும் எதிராகவும் தூக்கிப் பிடித்து பாமரத்தனமான அடிமட்ட கட்சி அரசியல் போன்று வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

சிலர் மேற்படி சிந்தனை முகாம்களை அல்லது அறிஞர்களை விமர்சித்து அறபு வலை தளங்களில் வெளியிடப்படும் விமர்சனங்களை அறை குறையாக மொழி பெயர்த்து தமது பெயரில் வெளியிட்டு அதிகப் பிரசங்கித்தனமான பிரபலயம் தேடுகின்றார்கள் .

இத்தகைய சிறுபிள்ளைத்தனமான சிந்தனைப் போக்கின் விளைவாக முஸ்லிம் உலகின் முன்னோடி அறிஞர்கள் சிந்தனையாளர்கள் அவர்கள் ஸலபிகளாக, இக்வானிகளாக இருக்கலாம் மிகவும் மட்டரகமாக அடிப்படை இஸ்லாமிய அதபு ஒழுக்க விழுமியங்களை மீறி விமர்சிக்கப்படுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை நவ யுக இஸ்லாமிய எழுச்சியில் சீர்திருத்த பணியில் ஸலபி சிந்தனை முகாமின் பங்களிப்பு போன்றே இக்வானிய சிந்தனை முகாமின் பங்களிப்பும் மகத்தானவையாகும், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை ஜமாத்தே இஸ்லாமி சிந்தனை முகாமும் அதேபோல் தப்லீக் ஜமாத்தின், மற்றும் தவ்ஹீத் அமைப்புக்களின் பணிகளும் மகத்தானவையே.

இலங்கையைப் பொறுத்தவரை மேலே சொன்ன எந்தவொரு அமைப்பினதும் நேரடி ஆதிக்கம் இல்லை என்றே குறிப்பிடல் வேண்டும், எல்லா கொள்கை முகாம்களில் இருந்தும் நல்ல அம்சங்களை உள்வாங்கி குறை நிறைகளிற்கு மத்தியிலும் இந்த தேசத்திற்கேற்ற அழகிய தஃவா மற்றும் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளுகின்ற முதிர்ச்சியான முன்னேடுப்புக்களே காணப்படுகின்றன.

மத்திய கிழக்கில் ஸலஃபி, இக்வானிய முரண்பாடுகள் பிராந்திய அரசியலையே பெரும்பாலும் மையப்படுத்தியுள்ளன, அவற்றிற்கிடையே சமரசம் ஏற்படும் நாள் தொலைவில் இல்லை, அவற்றை இறக்குமதி செய்து இந்த நாட்டில் நாம் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வது ஆரோக்கியமான அறிவு ஜீவித்துவமாக இருக்கமாட்டாது.

LEAVE A REPLY