அரபுக் கலாசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு

0
165

இலங்கை அரபுக் கலாசாலைகள் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற அரபுக் கல்லூரிகளுக்கிடையிலான பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தாருல் புர்கானுல் கரீம் அரபுக் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு அஷ்-ஷபாப் விளையாட்டுக் கழகம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரிக்கும், திவிரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி 6 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி 6 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றது. இதனை அடுத்து துடுப்பெடுத்தாடிய திவிரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி 6 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கட்களை இழந்து 47 ஓட்டங்களை பெற்றது.

இந்த சுற்றுப் போட்டியின் ஆட்ட நாயனாகவும், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயனாகவும் முஹம்மத் இஹ்ஸான் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து விச்சாலராக முஹம்மத் நிம்ரி தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரியின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

அணிக்கு 6 ஓவர் என்ற அடிப்படையிலான இந்த மென்பந்து சுற்றுப் போட்டியில் திவிரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் கெங்குணுகொல இர்பானியா அரபுக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இந்த சுற்றுப் போட்டியில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி, கெங்குணுகொல இர்பானியா அரபுக் கல்லூரி, மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி, நாரம்மல ஹகீமியா அரபுக் கல்லூரி, கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரி, சிலாபம் ரப்பானியா அரபுக் கல்லூரி, மாளிகாவத்தை ஹம்தானியா அரபுக் கல்லூரி, தெமடக்கொட மஹ்மூதியா அரபுக் கல்லூரி, குருணாகல் இப்னு மஸ்ஹுத் அரபுக் கல்லூரி, நீர்கொழும்பு தாரூல் புர்கான் அரபுக் கல்லூரி, திஹாரிய ஸலாஹியா அரபுக் கல்லூரி, திவிரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி ஆகிய அரபுக் கல்லூரிகள் பங்குபற்றின.

நீர்கொழும்பு நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் பாரீஸ் ரபீ இந்த சுற்றுப் போட்டிக்கு முழு அணுசரனை வழங்கி இருந்தார்.

(எஸ். ஸஜாத் முஹம்மத்)

LEAVE A REPLY