(Poem) பிச்சைக்காரன்

0
51

பிச்சைக் காரன்

அஞ்சுரூபாக் காசெடுத்து
அவனுக்குப் போட முன்
பஞ்சம் பிடித்தவர்கள்
பார்க்கிறார் பல விடயங்கள்.

பிஞ்ச சேர்ட் இருக்கணும்
பிச்சை எண்டு கெஞ்சனும்
கொஞ்சம் கூட எண்ணையின்றி
கொண்டை முடி பறக்கணும்
அஞ்சாறு சிரங்குகள்
ஆங்காங்கு இருக்கணும்
கெஞ்சிக் கேட்கணும்
கிடந்து முனங்கணும்
கொஞ்சும் குழந்தையொன்றும்
கூட இருந்து வாடணும்.
நஞ்சடித்த நெத்தலி போல்
நலிந்து உடல் இருக்கணும்
நெஞ்சில் உள்ள எலும்புகள்
நேரடியாத் தெரியணும்.
வஞ்சிக்கப் பட்டதாய்
வாயாலே புலம்பணும்.

இத்தனை தகுதிகளில்
எண்பது வீதமேனும்
ஒத்து வந்தாத்தான்
ஒரு குற்றி கொடுத்திடுவார்.
பத்து ரூபாக் கொடுப்பதெனில்
பள்ளிக் கடிதம் கேட்கும்
இத்தகைய மனிதர்தான்
இருந்தும் பிச்சைக்காரன்.

(நிஷவ்ஸ்)

LEAVE A REPLY