ஹஜ் விவகாரத்தில் நானும் விலை பேசப்பட்டேன்; அமைச்சர் ஹலீம்

0
219

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கடந்த காலங்களில் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.

இந்த விசாரணை அறிக்கையின் பிரகாரம் ஹஜ் முகவர்கள் சிலரின் அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் அழைப்பின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

“ஒரு காலத்தில் (1977-1989) எம்.எச்.முஹம்மத் அவர்கள் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள முஸ்லிம் சமய விவகார அமைச்சராக பதவி வகித்ததன் பின்னர் நீண்ட காலத்திற்கு பின்னர் இப்பதவி எனக்கு கிடைத்துள்ளது. இடைப்பட்ட காலங்களில் முஸ்லிம் விவகார அமைச்சு இல்லாத நிலை காணப்பட்டதுடன் முஸ்லிம் கலாசார திணைக்களம் வேறு சில அமைச்சுகளின் கீழ் அரைகுறையான நிலையில் செயற்றிறன் குன்றியதாக இயங்கி வந்தது. இப்போது நல்லாட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக அது மாற்றப்பட்டதன் பின்னர் அதன் மூலம் எமது சமூகத்திற்கு வேண்டிய பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக வியாபார விடயமாக விஸ்பரூபம் பெற்றிருந்த ஹஜ் விவகாரத்தை கட்டுக்கோப்புடன் ஒழுங்கமைத்து சிறப்பாக முன்னெடுப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் ஹஜ் ஏற்பாடுகளில் பாரிய ஊழல், மோசடிகள், முறைகேடுகள் இடம்பெற்று வந்துள்ளன. ஹாஜிகளிடம் இருந்து பெரும் தொகையான கட்டணத்தை அறவிட்ட போதிலும் அவர்களுக்கான வசதிகள் முகவர்களினால் சரியாக ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் பாரிய அநியாயம் இழைக்கப்பட்டிருக்கின்றது.

இவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை அமைத்துள்ளேன். அந்த விசாரணை அறிக்கையின் பிரகாரம் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். அதன்படி சில ஹஜ் முகவர்களின் அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படலாம். நான் எப்போதும் ஹாஜிகளின் பக்கமே இருப்பேன். முகவர்களுக்கு சார்பாக செயற்பட மாட்டேன். இனிவரும் காலங்களில் ஹஜ் கோட்டாக்கள் முவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. நாமே ஹாஜிகளை தெரிவு செய்வோம். அவர்கள் வேண்டிய முகவர்களுடன் ஹஜ்ஜுக்கு செல்லலாம்.

தாண்டவமாடும் ஹஜ் வியாபாரத்திற்காக நான் கூட விலை பேசப்பட்டேன். அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். நான் தப்பிவிட்டேன். எனது பதவிக் காலத்தில் எந்தவொரு முகவரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஹஜ் விவகாரத்தில் மோசடி, முறைகேடுகளுக்கு துணை போக மாட்டேன்.

ஹஜ் யாத்திரைக்காக முன்னர் எட்டு தொடக்கம் ஒன்பது இலட்சம் ரூபா வரை அறவிடப்பட்ட கட்டணத்தை இம்முறை நான்கரை இலட்சமாக குறைப்பதற்கு கண்டிப்பான நடவடிக்கை எடுத்துள்ளேன். மக்காவிலுள்ள இலங்கை இல்லத்தை மீட்டெடுப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அது கிடைக்குமாயின் பெருமளவு ஹஜ் யாத்திரிகர்களை அங்கு தங்கு வைக்க முடியும் அப்போது இன்னும் கட்டணத்தை குறைக்க முடியுமாக இருக்கும்” என்றார்.

பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் இலங்கை வக்பு சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி, அமைச்சர் ஹலீமை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அத்துடன் பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா மௌலவி, அமைச்சருக்காக விசேட துஆப் பிரார்த்தனையை மேற்கொண்டார். சாய்ந்தமருது பிரதேசத்தின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் அப்துல் மஜீத் நன்றியுரையாற்றினார்.

LEAVE A REPLY