சாய்ந்தமருதுக்கு கலாசார மண்டபம் வேண்டும்; அமைச்சர் ஹலீமிடம் அஸ்வான் மௌலானா வேண்டுகோள்!

0
152

அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பழைமை வாய்ந்த சாய்ந்தமருது பிரதேசத்தில் கலாசார மண்டபம் ஒன்றை அமைத்துத் தருமாறு மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா, முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ ஹலீமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருதம் கலைக்கூடல் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நேற்று சனிக்கிழமை (23) இரவு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

“எமது சாய்ந்தமருது பிரதேசத்தில் கலாசார மண்டபம் ஒன்று இல்லாததால் கலை, கலாசார நிகழ்வுகளையும் பொது வைபவங்களையும் நடாத்துவதில் இப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்காக பல வருடங்களுக்கு முன்னர் பல தடவைகள் அரசியல்வாதிகளினால் அடிக்கல்கள் நடப்பட்டுள்ள போதிலும் நிர்மாண வேலைகள் நடைபெறவில்லை. இது இப்பகுதி மக்களுக்கு பலத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் தனது முஸ்லிம் விவகார அமைச்சின் ஊடாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் ஹலீம் அவர்கள், எமக்கு ஒரு கலாசார மண்டபம் ஒன்றை அமைத்துத்தர முன்வர வேண்டும் என இவ்வூர் மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன். சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இன்று அது தொடர்பிலான கோரிக்கை மகஜரை அமைச்சரிடம் கையளித்துள்ளதுள்ளனர்.

அதேபோன்று சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொலிவேரியன் வீட்டுத் திட்டப் பகுதியில் உப தபால் நிலையம் ஒன்று இல்லாமையினால் அந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அறுநூறுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற அப்பகுதி மக்களின் நலன் கருதி அங்கு ஒரு உப தபால் நிலையம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். அத்துடன் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிலவும் பிணக்குகள் தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

திருமலை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உலமாக் கட்சித் தலைவர் முபாரக் கோலாவி, அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எம்.எம்.சக்காப், கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா உட்பட மற்றும் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

LEAVE A REPLY