மின்சார சபையினால் மாறுபட்ட தகவல்கள்

0
209

அவசர தேவையின்போது தனியார் துறையினரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை மின்சார சபை, அமைச்சரவைக்கும் தமக்கும் மாறுபட்ட தகவல்களை வழங்கியுள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்தது.

இதற்கமைய, 55 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக, மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆணைக்குழு நேற்று நிராகரித்தது.

135 மெகாவாட் மின்சாரத்தை அவசரத் தேவைகளின்போது கொள்வனவு செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சரவை மற்றும் பொருளாதார முகாமைத்துவத்திற்கான அமைச்சரவை உப குழுவிற்கு கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அம்பிலிப்பிட்டிய, பெலிஅத்த, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு 95 மெகாவாட் மின்சாரமும், உக்குவளை, குருநாகல், பல்லேகெலே, நாஉல மற்றும் ஹபரணை ஆகிய பகுதிகளுக்கு 40 மெகாவாட் மின்சாரமும் தேவைப்படுவதாக மின்சார சபை தெரிவித்திருந்தது.

அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கிய போதிலும், மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊடாகவே விநியோகத்திற்கான அனுமதியைப் பெற வேண்டும்.

அதன்பிரகாரம், அம்பிலிப்பிட்டியவிலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையமொன்றில் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இலங்கை மின்சார சபை அனுமதியைக் கோரியிருந்தது.

எனினும், அதனை நிராகரித்த ஆணைக்குழு, அவசர தேவையின்போது மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான எவ்வித தேவையும் எழவில்லை என மின்சார சபைக்கு அறிவித்தது.

ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட திட்டத்தில், மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான எவ்வித தேவையும் ஏற்பட்டிருக்கவில்லை என மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அத்துடன், மின்சார சபையினால் வழங்கப்பட்டுள்ள சில தகவல்கள் தவறாகக் காணப்படுவதாகவும் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அம்பிலிப்பிட்டிய தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து, தேசிய மின் கட்டமைப்புடன் 100 மெகாவாட் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை இணைத்துள்ளதாக இது தொடர்பில் இன்று நியூஸ்பெஸ்ட் வினவியபோது சபையின் தலைவர் உறுதிப்படுத்தினார்.

ஹம்பாந்தோட்டைக்கு 20 மெகாவாட் மின்சாரத்தையும் காலிக்கு 15 மெகாவாட் மின்சாரத்தையும் ஹபரணைக்கு 20 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

எனினும், அமைச்சரவையிடம் முன்வைத்த மின்சாரத்தின் அளவிலும், ஆணைக்குழுவிடம் முன்வைத்த அளவிலும் வேறுபாடுகள் காணப்படுவதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று இலங்கை மின்சார சபைக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

135 மெகாவாட் மின்சாரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், அம்பிலிப்பிட்டியவில் இருந்து பெறப்பட்ட 100 மெகாவாட் மின்சாரத்துடன் மேலும் 55 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் பட்சத்தில், திடீரென கொள்வனவு செய்த மின்சாரத்தின் அளவு 155 மெகாவாட்டாக காணப்படுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் 20 மெகாவாட் வித்தியாசம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையிடம் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது போதுமான அளவு விநியோகம் காணப்படுகின்ற போது, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு எவ்வித தேவையும் இல்லை என மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்தது.

#News1st

LEAVE A REPLY