காத்தான்குடி பாலமுனை கிராமத்தில் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான குடிநீர் குழாய் பொருத்தும் நிகழ்வு

0
200

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பாலமுனை கிராமத்திற்கான சுமார் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான குடிநீர் குழாய் பொருத்தும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரின் முயற்சியினால் சுமார் 1 கோடி ரூபா செலவில் 2016.04.21 ஆந்திகதி வியாழக்கிழமை காத்தான்குடி பாலமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும், நீர்வழங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்துகொண்டு குடிநீர் குழாய் பொருத்தும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஷிப்லி பாறுக்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறுமெனே அபிவிருத்தியை மாத்திரம் சொல்லிக்கொண்டு அபிவிருத்திக்காக மக்களை சேர்க்கின்ற ஒரு மக்கள் சக்தியல்ல அது இந்த நாட்டினுடைய இருப்புக்காக முஸ்லிம்கள் இந்த நாட்டிலே 100 வருடங்கள் சென்றாலும் அவர்கள் எவ்வாறு அவர்களின் உரிமைகளை பெற்று வாழவேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கின்ற ஒரு மிகப்பெரிய சக்தி அதை நாங்கள் வெறுமெனே அபிவிருத்தி செய்கின்ற சிறியதொரு வரம்புக்குள் ஒதிக்கிவிடக்கூடாது என்பதே என்னுடைய கருத்தாகும்.

அந்த வகையில் அபிவிருத்தி என்பது ஒரு புறமிருக்க இப்பொழுது நாங்கள் எங்களுடைய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற மிகப்பெரிய சக்தி இலங்கையிலே சிறுபான்மை கட்சிகளுக்குள் இருக்கின்ற பெரும்பான்மையான ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. அதுலே எங்களுக்கு அமைச்சுக்கள் பிரதி அமைச்சுக்கள் என்று தேசிய ரீதியிலான அதிகாரங்களும் கிழக்கு மாகாணத்திலே முதலமைச்சு அதனுடைய அமைச்சுக்கள் என்று மிகப்பெரும் அதிகாரங்களையும் கொண்டிருக்கின்ற இந்தக்கட்சி வெறுமனே அதிகாரத்தை பயன்படுத்தி நாங்கள் அபிவிருத்திகளை மாத்திரம் செய்கின்ற ஒரு கட்சியாக நிச்சயமாக இருக்க முடியாது.

அந்த வகையில் நாங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும் நாங்கள் இந்த கட்சியை நேசிப்பது என்பதில் உயிரோட்டமுள்ளதாக இருக்க வேண்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய ஏகபோக பிரதிநிதியாக எவ்வாறு இருக்கின்றதோ அதேபோன்று ஏகபோக பிரதிநிதியாக ஒரேயொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் இருக்கவேண்டும் என்பதனை எல்லோரும் நாங்கள் எங்களுடைய மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அபிவிருத்தி என்பது அதிகாரங்கள் எங்களுக்கு வருகின்றபொழுது அது பின்னாலே தொடர்ந்து கொண்டு வரும் கௌரவ. அமைச்சர் அவர்கள் இப்பொழுது மிகப்பெரிய இரண்டு அமைச்சுக்களை வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் அவர்களிடத்தில் நாங்கள் எங்களுடைய விடயங்களை சொல்லுகின்ற பொழுது அல்ஹம்துலில்லாஹ் அதனை நீங்கள் முன்கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு நாங்கள் உதவி செய்கின்றோம் என்று சொல்வார்கள் ஏன் இதைச்சொல்லுகின்றேன் என்றால் அபிவிருத்திக்காக மாத்திரம் அமைச்சுக்களோ அதிகாரங்களோ அல்ல ஒரு சமூகத்தினுடைய எழுச்சிக்காகவும் அதனுடைய இருப்புக்காகவும் எதிர்கால அதனுடைய இருப்புக்காகவும் போராடுகின்ற சக்தியாக மாறவேண்டும்.

பாராளுமன்றத்திலே அதிகளவான ஆசனங்களை கொண்டிருக்கின்ற தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்று அமைச்சுக்களையோ அல்லது பிரதி அமைச்சுக்களையோ எடுத்துக்கொள்ளாமல் எதிர்கட்சியிலே அமர்ந்திருப்பதன் காரணம் தங்களுடைய கொள்கையில் இருக்கின்ற அந்த பிடிவாதம் தங்களுடைய கொள்கையில் நாங்கள் வெல்லாத வரையில் உங்களோடு நாங்கள் ஆட்சி மாற்றத்திற்கு கைகொடுத்திருந்தாலும் அந்த ஆட்சி மாற்றத்தினூடாக நாங்கள் எங்களுக்குரிய விடயங்களை கேட்கமாட்டோம் தங்களுடைய தமிழ் சமூகத்திற்கு தேவையான விடயங்களை நாங்கள் கேட்போம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

அது மாத்திரமல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாங்கள் வெறுமனே கதைத்துக்கொண்டிருக்கின்ற ஓர் கட்சியல்ல ஆக்கபூர்வமான விடயங்களை முன்கொண்டு செல்லுகின்ற ஓர் கட்சி இறுதியாக பாராளுமன்றத்திலே அங்கிகரிக்கப்பட்ட ஒரு விடயம் காணி சம்மந்தமான விடயம் 10 வருடங்களுக்குள் பயங்கரவாதத்துக்குள் அதாவது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் காணி ஆட்சி உரிமை என்பது கடந்த 10 வருட காலங்களுக்குள் அவர்களுடைய காணிகள் பலாத்காரமாக அல்லது அதற்குரிய பெறுமதி இல்லாமல் துப்பாக்கி முனையில் அவைகள் பெறப்பட்டிருந்தால் அவைகளை மீட்டெடுக்கின்ற ஒரு சட்டத்தினை முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு கௌரவ தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கொண்டுசென்று அதனை இப்பொழுது அமுல்ப்படுத்தக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் இவ்வாறான சேவைகள்தான் ஒரு சமூகத்தினுடைய ஒரு சமூக கட்சியினுடைய ஒரு சமூக தலைமையினுடைய செயற்பாடாக இருக்கும்.

ஆகவே இவ்வாறான எத்தனையோ சேவைகளைப்பற்றி நாங்கள் பேசலாம் இங்கு அதிகமாக பேசப்படுகின்ற ஆட்சி மாற்றத்திற்குப் பிறகுள்ள எங்களுடைய அதிகார பகிர்வு அதேபோன்று யாப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்களை எவ்வாறு நுட்பமாக மிக இலாபகரமாக எங்களுடைய விடயங்களை முன்கொண்டு செல்லலாம் என்ற விடயத்தில் மிகவும் துள்ளியமாக ஆராய்ந்து ஆழமாக செயற்படுகின்ற ஒரு கட்சியாக ஒரு தலைமைத்துவமாக எங்களுடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கின்றது என தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும், நீர்வழங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம், மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாஹிர், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன், முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் மர்சுக் அஹமட்லெப்பை, மட்டு மாவட்ட நீர்வழங்கள் பிராந்திய முகாமையாளர் பிரகாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை கிராமத்தின் மத்திய குழுவின் தலைவர் பௌசர் மற்றும் பொதுமக்கள் என பலர் கொண்டனர்.

(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY