ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில்: பஸ் பயணிகளுக்கு அரசு சார்பில் குடிநீர் பாட்டில் வினியோகம்

0
222

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. குண்டூர் மாவட்டத்தில் நேற்று 111 டிகிரி வெயில் கொளுத்தியது. கர்னூலில் 109 டிகிரியும், அனந்தபுரத்தில் 107 டிகிரியும் வெப்பம் பதிவானது. வெயிலுடன் அனல் காற்றும் விசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக குளிர்ந்த குடிநீர் பாட்டில் வழங்க ஆந்திர அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

ஆந்திர அரசு போக்குவரத்து கழக ஏ.சி. பஸ்களான இந்திரா, கருடா, கருடா பிளஸ், அமராவதி ஆகிய பஸ்களில் பயணிகளுக்கு முன்பு அரை லிட்டர் குடிநீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. இப்போது ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் கிராமப்புறங்களில் இயக்கப்படும் சாதாரண கட்டண பஸ், எக்ஸ்பிரஸ் பஸ்களில் குளிர்ந்த வாட்டர் கேன் வைக்கப்பட்டு பயணிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் அரசு பஸ் ஊழியர்களுக்கு இலவசமாக மோர் பாக்கெட் வழங்கப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள 128 பஸ் டெப்போவில் 35 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு ரூ.6 விலை கொண்ட மோர் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக மாதம் ரூ.8 கோடி அரசுக்கு செலவாகும் என்று கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY