பிள்ளையானின் விளக்கமறியலும் 6 மாதங்களுக்கு மேலாக நீடிப்பு

0
213

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பின்னையான்) மீதான விளக்கமறியலும் 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நபரான இவர் புதன்கிழமை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டபோது விளக்கமறியலை ஏப்ரல் 27 வரை நீடிக்கும் உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 11ம் திகதி குற்றப்பலனாய்வு துறையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருடன் இவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா அக் கட்சியின் முன்னாள உறுப்பினரான கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ரங்கசாமி மற்றும் இராணுவ புலனாய்வை சேர்ந்ததாக கூறப்படும் மொகமட் கலீல் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் நான்கு பேரும் புதனன்று மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர் செய்யப்பட்ட போது நீதிபதி எம். கணேசராஜா எதிர்வரும் 27ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஏற்கெனவே மற்றுமோர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச் செயலாளரான பி. பிரசாந்தனும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் அன்று மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் ஆரையம்பதி பிரதேசத்தில் அரசாங்க பள்ளிக் கூட ஆசிரியரான கே. மனோகரன் மற்றும் அவரது உறவினரான பெண்ணொருவரும் அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரியினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 23ம் திகதி காத்தான்குடி பொலிஸாரால் இவரும் இவரது சகோதரரான ஹரனும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாயன்று மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவர்கள் மீதான விளக்கமறியலும் 6 மாதங்களுக்கு மேலாக (அடுத்த மாதம் 3ம் திகதி வரை) நீடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY