புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்தி கருத்தறியும் முழுநாள் செயலமர்வு

0
254

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்துவதோடு, அதில் உள்வாங்குவதற்காக கருத்தறியும் முழுநாள் செயலமர்வொன்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வியாழக்கிழமை (21) மட்டக்களப்பில் நடாத்துகின்றது.

நோன்மதி விடுமுறையான அன்றைய தினம் காலை 8.30 மணியிலிருந்து இரவு 4.30 மணி வரை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெறவுள்ள இச் செயலமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஸ்ரீலமுகா கட்சியின் அரசியல் உயர் பீட உறுப்பினர்கள் ஆகியோரும் மேலும் அழைக்கப்பட்ட புத்திஜீவிகள் சிலரும், சமூக ஆர்வலர்களும் பங்குபற்றி கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாருக் தெரிவித்தார்.

இந்தச் செயலமர்வில் ‘அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகளும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம்’ என்ற தலைப்பில் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமும், ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற மீயுயர் தன்மையை மீளமைத்தல்; எண்ணிக்கையில் சிறிய சமூகங்களின் அரசியல் நோக்கு’ என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் உரையாற்றவுள்ளனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம், கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோரும் உரை நிகழ்த்துவர்.

இதன்போது, புதிய அரசியலமைப்பில் எந்தெந்த முக்கிய அம்சங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும், எவ்வாறான ஆக்கபூர்வமான அபிப்பிராயங்களை உள்வாங்கலாம் என்பது பற்றியும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக, இதற்கான ஏற்பாட்டாளராகச் செயல்படும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாருக் தெரிவித்தார்.

LEAVE A REPLY