50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காங்கேயேனோடை பிரதான வீதி மிக விரைவில் புனரமைப்பு: ஷிப்லி பாறூக்

0
96
மட்டக்களப்பு, காங்கேயேனோடை பதுரியா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற Badhuriya Premier League (BPL) – 2016 கிரிக்கெட் மென்பந்து தொடர் 2016.04.17ஆந்திகதி நிறைவுக்கு வந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கலந்து கொண்டார்.
இதன் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…
இங்கே பல திறைமையான வீரர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் வெறும் பொழுதுபோக்கிற்காக மாத்திரம் விளையாடப்படுகின்ற ஒன்றாக மாறிவருகின்றது. அதற்கான காரணம் அவர்களின் குடும்ப பொருளாதார சுமையாகும். அவர்கள் தங்களது வருமானத்திற்காக வேறு தொழில்களில் ஈடுபட வேண்டிய தேவையுள்ள காரணத்தினால் அவர்களுக்கு விளையாடுவதற்கோ தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கோ சந்தர்பம் இல்லாமல் போகின்றது. ஆகவே இதற்கென நாங்கள் ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆலோசித்திருக்கிறோம். அதாவது காங்கேயேனோடை அல்லது பாலமுனை போன்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து இந்த பிரதேசங்களிலுள்ள இளைஞர்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொழில் புரியக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி அதன் பின்னர் அவர்கள் விளையாடக்கூடிய சந்தர்பத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும்.
இதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரமும் பலப்படுத்தப்படுவதோடு அவர்களின் திறமைகளையும் வெளிக்கொண்டுவர முடியும். இவ்வாறானதொரு அடிப்படையிலேயே இந்த மாதம் முதலாம் திகதி ஏறாவூர் நகரில் பாரிய மூன்று தொழிற்சாலைகளை அமைத்திருக்கின்றோம். அதனை தொடர்ந்து நான் முதலமைச்சர் அவர்களிடம் மிகவும் வற்புறுத்தி கேட்ட விடயம்தான் பாலமுனை அல்லது காங்கேயேனோடை போன்ற இடத்தில் தொழிற்சாலைகளை அமைத்து எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது.
மேலும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் கௌரவ ஹரிஸ் அவர்களை அழைத்து வந்து காத்தான்குடி மற்றும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு எமது பிரச்சினைகளையும் தேவைகளையும் அவரிடம் எடுத்துக்கூறி அவரால் முடிந்த உதவிகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவிருக்கின்றோம்.
மேலும் எமது காங்கேயேனோடை பிரதான வீதியின் அபிவிருத்திக்காக 50 லட்சம் ரூபாயினை ஒதுக்கியிருக்கின்றோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அதன் பணிகள் பூரணப்படுத்தப்படும். அது மட்டுமல்லாமல் காங்கேயேனோடை அல் அக்ஸா பாடசாலையை 600 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்திற்குள் உள்வாங்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
மேலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இலங்கையின் பலமிக்க ஒரு கட்சியாக, முஸ்லிம்களின் ஒருமித்த குரலாக மாறி வருகின்றது. எமக்கு பாராளுமன்ற அமைச்சர், பிரதி அமைச்சர், முதலமைச்சர் போன்ற அரசியல் அதிகாரங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி எமது சமூகத்திற்கு எதனை சாதிக்க முடியுமோ அவற்றை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என்று தெரிவித்தார்.
(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY