கல்முனை பஸ் நிலையம் மீளமைப்பு; தனியாருக்கு காரியாலயம்; நூலகத்தின் நலனுக்கும் ஏற்பாடு

0
108

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர பிரதான பஸ் நிலைய மீளமைப்பின்போது தனியார் பஸ்களுக்கு தரிப்பிடம் ஏற்படுத்தப்படுவதுடன் காரியாலயம் ஒன்றும் அமைக்கப்படும் என மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

பயணிகளின் நலன் கருதி கல்முனை பிரதான பஸ் நிலையத்துடன் தனியார் பஸ் சேவையும் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருப்பதால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த பஸ் நிலையத்தை விஸ்தரித்து, மீளமைப்பு செய்வதற்கு மாநகர சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இந்த பஸ் நிலைய மீளமைப்பின்போது அருகில் அமைந்துள்ள பொது நூலகம் எதிர்நோக்கியுள்ள சத்தம் மற்றும் இடைஞ்சல்களை கருத்தில் கொண்டு அந்நூலகத்திற்கு எல்லைச் சுவர் அமைக்கப்பட்டு, அதன் அமைதிச் சூழலை உறுதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் பஸ் நிலைய வளாகத்தில் ஆண் மற்றும் பெண்களுக்காக தனித்தனி மலசல கூடங்கள் அமைக்கப்படும். இவற்றை உள்ளடக்கியதாக மீளமைப்பு பணிகளை முன்னெடுக்குமாறு மாநகர சபையின் பொறியியலாளருக்கு பணித்துள்ளேன்.

இந்த மீளமைப்பு திட்டத்திற்காக 40 இலட்சம் ரூபாவை செலவிட மதிப்பிடப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY