பொலிஸ் அதிகாரி மீது மோட்டார் சைக்கிளை மோதிய இளைஞர்கள் மூவருக்கும் விளக்கமறியல்

0
169

(ஏ.எச்.ஏ. ஹு ஸைன்)

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் எல்லை நகர் வீதி ரெயில்வே கடவையில் வாகனங்களைப் பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது மோட்டார் சைக்கிளை மோதிய இளைஞர்கள் மூவரையும் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். றிஷ்வி உத்தரவிட்டார்.

வழமையான வீதி ரோந்து வாகனப் பரிசோதனையின் நிமித்தம், ஏறாவூர் எல்லைவீதி ரெயில்வே கடவையில் வீதி வாகனப் பரிசோதனையில் போக்குவரத்துப் பொலிஸார் ஞாயிறன்று இரவு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்கள் பொலிஸ் அதிகாரி மீது மோதியதில் அந்த அதிகாரியின் கை முறிந்தது.

இதனால் காயம்பட்ட ஏறாவூர் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ரீ.ஏ. சுதத் கை முறிந்த நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தபோது அவர்கள் பதற்றப்பட்டு பொலிஸ் அதிகாரி மீதே மோட்டார் சைக்கிளை மோதி நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் ஐயங்கேணிக் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதன் நிரோஸன் (வயது 19) யோகதாஸன் ருமேஸ் (வயது 23) கந்தசாமி பிரகாஸ் (வயது 22) ஆகிய மூன்று இளைஞர்களும் சாரதி அனுமதிப்பத்திரம், மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் மற்றும் தலைக் கவசம் இன்றிப் பயணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களை ஏறாவூர் பொலிஸார் திங்களன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதி மன்றத்தில் நிறுத்தினர். இதன்போது இந்த விளக்கமறியல் உத்தரவு நீதிவானால் பிறப்பிக்கப்பட்டது. பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY