டில்மா ரூசெபை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றம் அனுமதி

0
126

பிரேசில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ‘பெட்ரோபாஸ்’ நிறுவனத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் 80 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊழல் தொடர்பாக அந்நாட்டின் அதிபர் டில்மா ரூசெப் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், தனது அரசு உதவியாளர் என்ற அந்தஸ்துடன் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா என்பவரை புதிய மந்திரியாக டில்மா ரூசெப் கடந்த புதன்கிழமை நியமித்தார். வரும் 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தனக்கு பதிலாக லுலாவை களமிறக்க டில்மா ரூசெப் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தனது நெருங்கிய கூட்டாளியான லூலாவை இந்த பதவியில் நியமித்து, தன்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை டில்மா ரூசெப் மறைக்க முயல்வதாக பிரேசில் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

டில்மா ரூசெப் மீது கூறப்படும் பலகோடி மதிப்பிலான ஊழல் புகாரில் லுலாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அவரது பதவி நியமனம் செல்லாது என பிரேசில் நாட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கில்மார் மென்டெஸ் அறிவித்தார். ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு அவர் பரிந்துரைத்தார்.

இதற்கிடையே, பாராளுமன்றத்தில் டில்மா ரூசெப் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வந்தன. ஏப்ரல் 17-ம் தேதி (நேற்று) பாராளுமன்றத்தில் டில்மா ரூசெப்-புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் தனக்கு போதிய ஆதரவு கிடைக்காது என்பதை அறிந்துள்ள டில்மா ரூசெப், பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு தடை விதிக்குமாறு அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இதுதொடர்பாக, அவரது வக்கீல் தாக்கல் செய்த அவசர மனுவின்மீது விசாரணை நடத்திய நிதிபதிகள், பிரேசில் அதிபரை பதவி நீக்கம் செய்யும் பாராளுமன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டபடி பாராளுமன்ற கீழ்சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 513 உறுப்பினர்களில் 343 பேர் அதிபர் டில்மா ரூசெப் பதவி விலகக் கோரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். 110 உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்தும், டில்மா ரூசெப்பை ஆதரித்தும் வாக்களித்தனர்கள். மற்றவர்கள் அவைக்கு வராமலும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலும் நடுநிலை வகித்தனர்.

இந்த தீர்மானத்தின் முன்மொழிவு பாராளுமன்ற மேலவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்குள்ள உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தால் பிரேசில் அதிபர் பதவியிலிருந்து டில்மா ரூசெப் வெளியேற்றப்படுவார். பிரேசிலின் முதல் பெண் அதிபராக பொறுப்பேற்ற ரூசெப் டில்மாவின் பதவிக்காலம் வரும் 2018-ம் ஆண்டுவரை உள்ளநிலையில், அவருக்கு பதிலாக தற்போதைய துணை அதிபர் மைக்கேல் டேமெர் பிரேசிலின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார் ஏன எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY