இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) தலைவர்களை சந்திக்க ரிஷாத், ஜெமீல் சவூதி பயணம்!

0
216
இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) தலைவர்களை சந்தித்து தெளிவுபடுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை ஜித்தாவில் அமைந்துள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளின் பேரில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இச்சந்திப்புக்கான குறுகிய அழைப்பை விடுத்திருந்தது. இந்த அவசர அழைப்பை ஏற்றே இவர்கள் சவூதி சென்றுள்ளனர்.
இச்சந்திப்பு தொடர்பில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;
“இலங்கையில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை என்பவற்றில் மாற்றங்களை செய்தல், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை மையமாகக் கொண்டு நாட்டின் அரசியல் யாப்பை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இவ்விடயத்தில் தமிழ் சமூகம் சார்பில் உள்நாட்டில் தமிழ் அரசியல் தலைமைகள் காத்திரமான வரைபுகளை தயாரித்து, அவற்றை மக்கள் மயப்படுத்தி வருவதுடன் அந்த சமூகத்திற்கு சார்பாக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் பாரிய அழுத்தங்களை பிரயோகித்து வருகின்ற அதேவேளை இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகம், இந்த அரசியல் யாப்பு மாற்றத்தில் எதிர்பார்க்கும் அபிலாஷைகள் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எவரும் கவனம் செலுத்தாமல், கைவிடப்பட்டிருக்கும் அபாய நிலை காணப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டே இலங்கையின் அரசியல் யாப்பு மாற்றத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி, அவர்கள் ஊடாக இஸ்லாமிய நாடுகளின் அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுப்பதன் மூலம் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றங்களை முன்னெடுப்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்காகவே இந்த சந்திப்பை மேற்கொள்கின்றோம்.
அது மாத்திரமல்லாமல் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், கிழக்கு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமகால பிரச்சினைகள் தொடர்பிலும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் ஒத்துழைப்பை கோரவுள்ளோம்.
இன்ஷா அல்லாஹ் எமது இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நம்புகின்றோம். அதற்காக இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் வல்ல இறைவனைப் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கடந்த 2014ஆம் ஆண்டு பொது பல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு, பேருவளை, அளுத்கம, தர்கா நகரில் அது உச்ச நிலைக்கு வந்தபோது எனது ஏற்பாட்டில் இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பினரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நாம் சந்தித்து முறையிட்டதன் பேரில் அந்நாடுகளின் அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டமையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக அரபு நாடுகள் வாக்களித்தமையும் இதற்கு நல்ல உதாரணமாகும்.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் இலங்கைத் தமிழர்களுக்காக பலமாக குரல் எழுப்புவது போன்று இஸ்லாமிய நாடுகள் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பும்போதே இரு சிறுபான்மைச் சமூகங்களையும், இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் சமமாகப் பார்க்கின்ற ஒரு நிலைமை ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY