மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம்: ஈக்வேடர் நிலநடுக்க பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு

0
133

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்குவேடர் நாட்டில் இன்று அடுத்தடுத்து தாக்கிய இரு நிலநடுக்கங்கள் மற்றும் சுமார் 50 அதிர்வுகளில் பலியானோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் குவிட்டோவில் இருந்து 173 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் சுமார் இருபது கிலோமீட்டர் ஆழத்தில் முதலில் ஒரு மிதமான நிலநடுக்கமும், அதற்கடுத்த சில நிமிடங்களில் சக்திவாய்ந்த மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதாக பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

(இந்திய நேரப்படி) இன்று காலை சுமார் 6.30 மணியளவில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டராகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ரிக்டராகவும் பதிவாகியுள்ளது. இவ்விரு நிலநடுக்கங்களால் குவிட்டோ நகரில் உள்ள வீடு, கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஈக்குவேடரின் வர்த்தக நகரமான குயாகுவில் நகரில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. மன்ட்டா நகரில் உள்ள விமான நிலையத்தில் கட்டுப்ப்பாட்டு அறை கோபுரம் சாய்ந்து விழுந்தது.

மேற்கண்ட மூன்று நகரங்களிலும் பல வீடுகள் இடிந்து நாசமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி சுமார் 77 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்குள்ள ஆறு மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டைநாடான பெருவின் வடபகுதிகளிலும் உணரப்பட்டதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

இன்றைய நிலநடுக்கம் தாக்கிய பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடலோரப் பகுதிகளில் பேரலைகள் எழக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டிலுள்ள வாட்டிகன் நகருக்கு சென்றுள்ள ஈக்வேடர் அதிபர் ரபேல் கொரேயா, தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு தாய்நாட்டுக்கு விரைந்துள்ளார். முன்னதாக, ரோம் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ’நிலநடுக்கத்தால் சீர்குலைந்த எதை வேண்டுமானாலும் மறுபடியும் கட்டியமைத்து விடலாம். ஆனால், இழந்த உயிர்களை திரும்பப்பெற முடியாது. அதுதான் என்னை வருத்துகிறது’ என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY