ஈக்குவேடரில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 30 பேர் பலி: சுனாமி எச்சரிக்கை

0
134

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்குவேடர் நாட்டில் இன்று அடுத்தடுத்து தாக்கிய இரு நிலநடுக்கங்களால் 30 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் குவிட்டோவில் இருந்து 173 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் சுமார் இருபது கிலோமீட்டர் ஆழத்தில் முதலில் ஒரு மிதமான நிலநடுக்கமும், அதற்கடுத்த சில நிமிடங்களில் சக்திவாய்ந்த மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதாக பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

(இந்திய நேரப்படி) இன்று காலை சுமார் 6.30 மணியளவில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டராகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ரிக்டராகவும் பதிவாகியுள்ளது. இவ்விரு நிலநடுக்கங்களால் குவிட்டோ நகரில் உள்ள வீடு, கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஈக்குவேடரின் வர்த்தக நகரமான குயாகுவில் நகரில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. மன்ட்டா நகரில் உள்ள விமான நிலையத்தில் கட்டுப்ப்பாட்டு அறை கோபுரம் சாய்ந்து விழுந்தது.

மேற்கண்ட மூன்று நகரங்களிலும் பல வீடுகள் இடிந்து நாசமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி சுமார் 30 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிடிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டைநாடான பெருவின் வடபகுதிகளிலும் உணரப்பட்டதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

இன்றைய நிலநடுக்கம் தாக்கிய பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடலோரப் பகுதிகளில் பேரலைகள் எழக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY