ஸ்ரீலங்கன் விமானம் திடீரென தரையிறக்கப் பட்டமைக்கான காரணம் என்ன?

0
203

கொழும்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமானம் திடீரென சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டமைக்கான காரணம்  கண்டறியப்பட்டுள்ளது.

UL 309 என்ற ஸ்ரீ லங்கன் விமானம் சிங்கப்பூரின் செங்கி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் மாலை புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனை அடுத்து விமானத்தில் இருந்த மூன்று இலங்கையர்களை அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்.

இதுபற்றி சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ.நிமல்சிறி தெரிவித்ததாவது,

விமானத்திற்குள் பயணியொருவர் எடுத்துச்செல்லக்கூடாத பொருட்கள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்த போது அவை ஆபத்தானவை என இனங்காணப்பட்டுள்ளது. அழுத்த வாயுக்களே ஆபத்தான பொருட்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. பயணியொருவரிடம் விசாரித்த போது உணவை சூடாக்குவதற்காக அவற்றைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். சில பயணிகள் இவ்வாறான ஆபத்தான பொருட்களை தமது பயணப்பொதிகளுக்குள் வைத்திருந்தமையாலேயே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் நாம் வினவினோம்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெறும் வரை எவ்வித தகவலையும் வெளியிட முடியாது என அவர் கூறினார்.

சர்வதேச விமான சட்டத்திற்கு அமைய எரிவாயு சிலிண்டர், வாயு கொள்கலன்களை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதியில்லை.

-NF-