சிங்களம், தமிழ், முஸ்லீம் என்பதைவிட இலங்கையர் என்ற எண்ணத்தில் வாழவேண்டும்: எஸ்.யோகேஸ்வரன்

0
239

(வாழைச்சேனை நிருபர்)

இலங்கையில் உள்ள மூவின மக்களும் ஓற்றுமையாக வாழ வேண்டும் நாங்கள் சிங்களம், தமிழ், முஸ்லீம் என்பதைவிட இலங்கையர் என்ற எண்ணத்தில் வாழவேண்டும் அப்போதுதான் எமது நாட்டை நாம் அபிவிருத்தி செய்யலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு பாசிக்குடாவில் அமைந்துள்ள The Calm Resort  டின் ஏற்பாட்டில் நேற்று (14.04.2016) நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்தியா எத்தனை மாநிலங்கலாக பிரிக்கப்பட்டிருந்த போதிலும் இம்மக்களிடம் கேட்டால் தான் இந்தியன் என்று மாத்திரம்தான் சொல்லுவார்கள், அதே போன்று எமது நாடடில் உள்ள அனைத்து மக்களும் நாட்டுப்பற்றுடன் நாங்கள் அனைவரும் இலங்கையர் என்ற எண்ணத்துடன் செயற்படுவோமாக இருந்தால் எமது நாட்டில் ஒற்றுமை நிலைத்துநிற்கும்.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு இனமும் மற்றய இனத்தின் உரிமையை மதித்து அந்த இனத்தின் அடையாளங்களைப்பாதுகாத்து அவர்களது கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து நாட்டிலே அனைவரும் சந்தோசமாக வாழ்வதற்கு அனைத்து மக்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

ஒன்று பட்ட நாட்டுக்குள் எங்கள் மக்கள் நியாயமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தர ஒரு அரசியல்தீர்வை இந்த நாட்டு அரசிடம் கோரியிருக்கிறோம், எங்ளது கோரிக்கை இந்த நாட்டை பிரித்துக்கொண்டு செல்வதல்ல, இந்த நாட்டிலே தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வடக்கு கிழக்கிலே தங்களை தாங்களே ஆட்சி செய்கின்ற ஒரு சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வைத்தான் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் எப்போதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல, சிங்களவர்கள் எங்களது உடன் பிறவா சகோதரர்கள். மதத்தின் ஊடான இரண்டு இனத்திற்கும் நிறைய தொடர்புகள் உண்டு, அதில் ஒன்றுதான் இன்று கொண்டாடப்படும் புதுவருடமும் ஆகும் என்றும் தெரிவித்தார்.

புதுவருட விளையாட்டாக தலையனை சமர், பலூன் உடைத்தல், பனிஸ் சாப்பிடுதல், கயிறு இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்று அதில் வெற்றியீட்டியவர்களுக்கு அதிக பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பொது முகாமையாளர் சுசந்த பண்டார தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பாசிக்கடாவிற்கான விடுமுறை விடுதி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.மாஹிர், கிழக்கு மாகான ஆதிவாசிகள் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY