பாதணி உற்பத்திகள் தரமானதாக இருந்தும் அதனை சந்தைப்படுத்த பாரிய சிக்கல்களை உற்பத்தியாளர்கள் எதிர் கொள்கின்றனர்: ஷிப்லி பாறுக்

0
158

தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் வீதிக்கு ஒருநாள் எனும் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கும் வேலைத்திட்டதினூடக மக்களுடைய குறைகளை கண்டறியும் நடவடிக்கையின் பலனாக அதிகமான இளைஞர்கள் காத்தான்குடி பிரதேசத்தில் பாதணி கட்டும் தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை அறியக்கிடைத்துள்ளது.

அவர்களது உற்பத்தி பொருட்கள் தரமானதாக இருந்தும் கூட அதனை சந்தைப்படுத்தும் விடயத்தில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு பிரதான காரணம் எல்லா வகையான பாதணிகளையும் எல்லா உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்வதானால், அதிக போட்டித்தன்மை ஏற்படுகின்றது அதன் காரணமாக மிகக்குறைந்த இலாபங்களை பெற்றுக்கொண்டு சந்தைப்படுத்தும் கட்டாய சூழலை தொழிற்சாலை உரிமையாளர்கள் முகம்கொடுக்கின்றனர்.

இவ்வாறான தொழிற்சாலைகளினூடாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொண்டு தமது வாழ்வை கொண்டு நடத்துகிறார்கள்.

இதனை சரியானதோர் கட்டமைபினூடக கூட்டமைத்து பாதணிகளை நேர்த்தியாகவும் மேலதிக தரத்திலும் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழிநுட்ப பயிற்சிகள், கழிவுகளை மீள்ப்பயன்படுத்தல், கழிவுகளை முகாமைத்துவப்படுத்தல் மற்றும் சூழல் மாசடைதலை தடுத்தல் போன்ற பயிற்சிகளை வழங்குவதனூடாக அவர்களுடைய உற்பத்தி தரத்தினை மேலும் அதிகரிக்க முடியும்.

காத்தான்குடியில் இருக்கின்ற இவ்வாறான தொழிற்சாலைகள் நடாத்துபவர்களையும் அதில் தொழில்புரிபவர்களையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பாக்குவதன் மூலம் ஒவ்வொரு பாதணி உற்பத்தி தொழிற்சாலை உரிமையாளர்களும் தங்களுக்கு தங்களுக்கென்றதோர் பிரத்தியேக பாதணிகளை உற்பத்தி செய்வதனூடாக உயர்ந்த தரத்திலான உற்பத்தியினையும் அதற்கான கேள்வியினையும் அதிகரித்து கொள்ளமுடியும்.

அதே நேரத்தில் உற்பத்திக்குரிய நல்ல விலையினை சந்தையில் பெற்றுகொள்வதனூடாக அவர்களிடம் தொழில்புரிபவர்களுக்கு உயர்ந்த ஊதியத்தினை வழங்கமுடியும் இதனூடாக அத்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்த முடியும். இன்னும் மேலதிகமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கமுடியும்.

பாதுகாப்பான முறையில் பாதணிகளை செய்யும் முறைகளை வழங்குவதனூடாக தொழிலாளர்கள் உபாதைகளுக்குள்ளாதல், சுகாதார ரீதியான தாக்கங்கள் என்பவற்றில் இருந்து பாதுகாக்க முடியும் அத்தோடு மிக உயர்ந்த தரத்திலான தொழிற்சாலைகளாக எமது தொழிற்சாலைகளை மாற்றமுடியும்..

காத்தான்குடியில் பாதணி உற்பத்தி தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ,

விரைவில் அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்களையும், அங்கு உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களையும் ஒன்றினைந்ததாக சந்திப்பொன்றினை ஏற்படுத்தி அவர்களது தொழிலினை முன்னேற்றும் முகமாக அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் ஓர் முன்னெடுப்பை இன்ஷா அல்லாஹ் கிழக்கு மாகாண சபையினூடாகவும் மத்திய அரசினூடாகவும் செய்யக்கூடிய அபிவிருத்தி பணிகளை தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY