பனாமா லீக்ஸ் எதிரொலி: ஸ்பெயின் நாட்டு மந்திரி ராஜினாமா

0
180

சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.

இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் மற்றும் தற்போதைய பிரதமர்கள், உக்ரைன் ஜனாதிபதி, சவுதி அரேபியா மன்னர் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளர்கள், அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மற்றும் பல நாடுகளின் மந்திரிகள் என நூற்றுக்கணக்கான பிரபலங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் நாட்டின் தொழில்துறை மந்திரி ஜோஸ் மானுவேல் சொரியா, இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்துக்கு சொந்தமான ஜெர்சி தீவில் தனது சகோதரரின் தொழிலில் முதலீடு செய்ததன்மூலம் ஏராளமாக பணம் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜோஸ் மானுவேல் சொரியா, காபந்து சர்க்காராக விளங்கிவரும் அரசுக்கு தன்னால் அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY