மாரடைப்பும் மாரடைப்பு அல்லாத வலியும்

0
245

நெஞ்சு வலி என்றால் பயப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஏனெனில் எந்த நெஞ்சுவலியானாலும் அதனை மாரடைப்பு என்றே பலரும் கருதுகிறார்கள்.

இதயத்தின் அறைகளுக்குள் எந்த நேரமும் இரத்தம் நிறைந்திருக்கிறது ஆனாலும் அதனை இயக்கும் தசைநார்களுக்கு அந்த இரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை.

இரண்டு சிறிய இரத்தக் குழாய்கள் – கொரனரி நாடிகள் (Coronary arteries) மூலமே கிடைக்கின்றன. இவை முடியுரு நாடிகள் எனப்படுகின்றன.

இவற்றில் ஒன்றில் அல்லது அவற்றின் கிளைகளில் இரத்தம் செல்வது தடைப்பட்டால் அப் பகுதியில் உள்ள இருதயத்தின் தசை நார்களுக்கு இரத்தம் போதிய அளவு கிடைக்காது.

அந்நிலையில் தசை நார்களுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது போய்விடும். இது நெஞ்சுவலியாக வெளிப்படும்.

அல்லது தசை நார்களுக்கு இரத்த ஓட்டம் அடியோடு தடைப்படலாம்.

அந் நிலையில் இப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடவும் கூடும்.

இதுதான் Myocardial Infarction) எனப்படுகிறது. இதயத் தாக்குகை எனவும் சொல்லலாம். ஆனால் மாரடைப்பைத் தவிர வேறு காரணங்களாலும் நெஞ்சுவலி ஏற்படுகிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்

கடுமையான வலி திடீரென உங்கள் மார்பில் ஏற்பட்டால் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்.

நெஞ்சை இறுக்குவதுபோல
அமுக்குவது போல,
பிழிவதுபோல,
அல்லது பாரம் ஏற்றியது போல இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம்.
வலியானது பொறுக்க முடியாத கடுமையானதாக இருக்கும். இவ்வலி பெரும்பாலும் 20 நிமிடங்கள் அல்லது அதற்கு அதிகமாக நீடிக்கும். இவ்வலி பெரும்பாலும் நடுமார்பின் உட்புறத்தே ஏற்படும்.

வலி அவ்விடத்தில் மட்டும் மட்டுப்பட்டு நிற்காமல் இடது தோள்மூட்டு, இடதுகை, தொண்டை, கழுத்து, நாடி, முதுகு போன்ற இடங்களுக்கும் பரவக் கூடும்.

வலி ஏற்பட்டபோது செய்து கொண்டிருந்த கடுமையான வேலையை நிறுத்தினாலோ ஓய்வு எடுத்தாலோ கூட மாரடைப்பின் வலி தணியாது.

வலியுடன் கடும் வியர்வை, மயக்கம், களைப்பு, இளைப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றலாம். வலி இல்லாமல் கூட ஒரு சிலருக்கு மாரடைப்பு வருவதுண்டு.

நெஞ்சுவலிக்கு வேறு காரணங்கள்:

நெஞ்சு வலி ஏற்படுவதற்கு எமது நெஞ்சறையில் உள்ள இருதயம் மட்டுமின்றி, அதிலிருந்து வரும் நாளங்கள், நுரையீரல், களம் போன்ற உறுப்புகளும் காரணமாகலாம்.

அத்துடன் நெஞ்சுச் சுவரில் உள்ள தசைநார்கள், சவ்வுகள், எலும்புகளிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.

நெஞ்சுக்குக் கீழே உள்ள வயிற்றறையில் உள்ள இரைப்பை, ஈரல் போன்றவற்றிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.

பரிசோதனைகள்:

நெஞ்சுவலிக் காரணம் மாரடைப்பா அல்லது வேறு காரணமா என்பதை சில தருணங்களில் மருத்துவர்களால் கூட கண்டறிய முடியாது. நிச்சமாகக் கண்டறிய ஈசீஜி (ECG) பரிசோதனை உதவும்.

ஆனால் ஈசீஜியில் தெளிவாகத் தெரிய முன்னரே இருதய நொதியங்களைப் பரிசோதிக்கும் இரத்தப் பரிசோதனைகள் உதவும்.

காரணம் எதுவானாலும் உங்களால் தீர்மானிக்க முடியாது. மருத்துவ ஆலோசனை பெறுவதே ஒரே வழி.

இதய நோய்களுக்கு வாய்ப்பளிக்கும் காரணிகள்

இருதய நோய்கள் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் சில மனிதர்களால் கட்டுப்படுத்தக் கூடியவை. ஏனையவை கட்டுப்படுத்த முடியாதவை.

1.கட்டுப்படுத்தக் கூடிய காரணிகள்:
உயர் இரத்தஅழுத்தம்,
நீரிழிவு,
புகைத்தல்,
இரத்தத்தில் அதிக கொழுப்பு (கொலஸ்டரோல்),
தவறான உணவு முறைகள்,
அதீத உடற் பருமன்,
மதுபானம்,
உடலுழைப்பின்மை
ஆகியவற்றைக் கூறலாம். இவை யாவும் உங்களால் கட்டுப்படுத்த அல்லது மாற்றக் கூடியவையாகும்.

2. கட்டுப்படுத்த முடியாத காரணிகள்:

வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாகும். ஆனால் மாதவிடாய் முற்றாக நின்ற பின் அவர்களுக்கும் அதிகரிக்கும். பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம். இவை மட்டுமே .

எனவே மாரடைப்பு வராமல் தடுப்பது பெருமளவு உங்கள் கைகளிலேயே தங்கியிருக்கிறது.

LEAVE A REPLY