(Poem) முயற்சியுடன் முறையிடுவோம்

0
51

(Mohamed Nizous)

பக்கட்டில் காசின்றி
பசியோடு திரிந்தாலும்
இக்கட்டில் இறுகி
எல்லாமே இழந்தாலும்
எக்கஷ்டம் வந்தாலும்
இறைவா உன்னிடத்தில்
திக்று துஆவினால் – உதவி
தேடுற்கு அருள்புரிவாய்.

பரீட்சையில் பெயிலாகும்
பரிதாபம் வந்தாலும்
விருட்சமாய் நின்ற தொழில்
விழும் நிலை வந்தாலும்
பொருட் செலவு வந்தாலும்
புலம்பித் திரியாமல்
அருள் வேண்டி உனைக் கேட்க
அல்லாஹ் நீ வழி தருவாய்.

ஓடி ஆடித் திரிந்த உடல்
ஓய்ந்து நோயில் வீழ்ந்தாலும்
தேடிய செல்வமெல்லாம்
தீரும் நிலை வந்தாலும்
வீடிழந்து போனாலும்
வேறு துன்பம் வந்தாலும்
நாடி உனை அழைக்கும்
நாவினைத் தந்திடுவாய்.

முழுதாக விழுந்தாலும்
முயற்சியைக் கைவிடாது
எழ வேண்டும் என்பதுதான்
இஸ்லாம் மார்க்கமாகும்
தொழுகை துஆவோடு
தொடராக முயற்சித்தால்
பழுதான வாழ்க்கையும்
பயன்களைத் தரத் தொடங்கும்

LEAVE A REPLY