இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஓய்வு: காரணம் என்ன

0
183

இதய கோளாறு பிரச்சினையால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஓய்வு அறிவித்திருப்பது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வளர்ந்து வந்த ஜேம்ஸ் டெய்லர் திடீரென இதய கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இதயத்தின் வலது அறையில் தசை சுருங்கி விரிவதில் இவருக்கு தீவிர பிரச்சினை இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதயத்தில் தசை சுருங்கி விரிவதில் பிரச்சினை இருந்தால் அது மாரடைப்புக்கு வழிவகுத்து விடும். இதனால் 26 வயதிலேயே அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்டில் விளையாடி 312 ரன்களும், 27 ஒரு நாள் போட்டிகளில் ஆடி ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 887 ரன்களும் சேர்த்துள்ளார். மிடில் வரிசையில் வலு சேர்க்கும் வகையில் ஆடி வந்த ஜேம்ஸ் டெய்லருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

தற்போது நாட்டிங்காமில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஓரிரு தினங்களில் ஆபரேஷன் நடக்க உள்ளது. இந்த நோயை முழுமையாக குணப்படுத்துவது கடினம். ஆனால் மருந்துகள் மூலம் கட்டுக்குள் வைக்க முடியும். ‘இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வேதனைக்குரிய தகவல்.

ஜேம்ஸ் டெய்லரின் கிரிக்கெட் வாழ்க்கை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவுக்கு வருவது எதிர்பாராத ஒன்று’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குனர் ஸ்டிராஸ் கூறியுள்ளார். அவர் சீக்கிரம் குணமடைந்து மீண்டு வர பிரார்த்திப்பதாக ஸ்டீவன் சுமித் உள்பட பல வீரர்கள் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY