நமக்கு எதிரான அரசியலில் ஈடுபடுபவர்களிடம் அதிகாரம் இருந்தாலும் அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய முனைய வேண்டும்: ஷிப்லி பாறுக்

0
219

(அஹமட் இர்ஷாட்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் 2016.04.10ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை கல்குடாத் தொகுதியின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாஞ்சோலை மற்றும் மீராவோடை கிராமங்களில் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டார்.

மாஞ்சோலை கிராமத்திற்கான மக்கள் சந்திப்பு எம்.எச்.எம். கபீர் மற்றும் சாகுல் ஹமீட் ஆகியோரின் தலைமையிலும் மீராவோடை கிராமத்திற்கான மக்கள் சந்திப்பு அக்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் பல குடும்பங்கள் வாழ்ந்து வருவதோடு, அதிலும் ஒரு நேரவேளை சாப்பாட்டினை மாத்திரம் உட்கொண்டு பல குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன. இதுதான் எம்சமூகத்தின் இன்றைய நிலைமையாக காணப்படுகின்றது.

மக்களின் குறைநிறைகளை கேட்டு கண்டறிதல் என்கின்ற விடயத்தில் எல்லோரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் அது மாத்திரமல்லாது மக்களுக்கு பணிபுரியும் விடயத்தில் நமக்கு எதிரான அரசியலில் ஈடுபடுபவர்களிடம் அதிகாரம் இருந்தாலும் அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய முனைய வேண்டும். இதில் நமது கௌரவம் பாதிக்கப்படும் என்று இருந்தாலும் அதை மக்களுக்காக ஏற்றுக் கொண்டு மக்களுடைய பிரச்சனைகளை அதனை உரிய இடங்களுக்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுக்கொடுக்கும் நல்ல மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து அனைத்திற்கும் ஆமா போட்டு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகள்தான் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். கல்குடாவுக்கு நான் வருவதினால் தேர்தல் வரப்போகின்றதோ என்று நீங்கள் யோசிக்கலாம் ஆனால் தேர்தலுக்காக மாத்திரம் வாக்கு கேட்டு வருபவன் நான் இல்லை அவ்வாறு நான் கல்குடாவுக்கு வந்ததுமில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கல்குடாவுக்கு ஒரே ஒரு பொதுக்கூட்டத்திற்கு மாத்திரம்தான் வருகை தந்துள்ளேன். அரசியல்வாதிகள் என்பவர்கள் மக்களின் சேவகர்கள் மக்களின் குறைநிறைகளை அவர்களின் இல்லம் நாடிச் சென்று தீர்க்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். நாம் வகிக்கும் பதவியால் மக்களுக்கு என்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவைகளை நாம் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

கல்குடாதொகுதியினை பொருத்தமட்டில் மிகவும் மக்கள் பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினை அதனை நான் நன்கறிவேன். நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கல்குடா பிரதேசத்திற்கு குடிநீரினை பெற்றுக்கொடுப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளார். அதற்கான வேலைத்திட்டங்கள் அவரினால் கல்குடாவில் ஆரம்பிக்கப்பட்டு அதை விரைவாக முடிவுறுத்த வேண்டும் என்ற விடயத்தில் அனைத்து சவால்களையும் வென்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். அதனை நீங்களும் கண்ணுாடாக பார்த்தும் இருப்பீர்கள் குடிநீருக்கான குழாய்கள் ஓட்டமாவடி தொடக்கம் செங்கலடி வரை பதிக்கப்படுவதனை அவதானித்திருப்பீர்கள். மிக விரைவில் கல்குடாவுக்கான குடிநீர்த்திட்டம் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பதவி என்பது ஓர் அமானிதம் நாளை மறுமை நாளில் நான் இப்பதவியைக் கொண்டு நீ மக்களுக்கு என்ன செய்தாய் என்று கேல்வி கேட்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு பதில் சொல்லக்கூடியவனாக நான் இப்பதவியினை எம்சமூகத்திற்கு பயன்படுத்திருக்க வேண்டும். வெறுமனே தான் மட்டும் சுகபோக வாழ்க்கையினை அனுபவித்து மக்கள் குறைகளை தீர்க்காது இருப்பேனேயானால் நாளை நான் அல்லாஹ்விடத்தில் சென்று பதில் கூற முடியாதவனாக ஆகிவிடுவேன்.

எனவே என்னால் இப்பிரதேச மக்களுக்கு இப்பதவியினால் எதனை பெற்றுக்கொடுக்க முடியுமோ அதனை நான் பெற்றுக்கொடுப்பேன் என தனதுரையில் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததோடு, எதிர்காலத்தில் தன்னாலான வாழ்வாதார உதவிகளை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்புக்களில் இரு கிராமங்களையும் சேர்ந்த மகளிர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY