முஸ்லிம் சமூகத்தினால் வெளியிடப்படும் ஊடகங்களை கைதூக்கி விடுவது சமூகத்தின் கடமை: என்.எம்.அமீன்

0
376

(சாய்ந்தமருது – எம்.எஸ்.எம்.சாஹிர்)

Hunais Farookவாசிப்பு ஒரு மனிதனை முழுமனிதனாக மாற்றுகின்றது. அவர்களை ஆற்றலுள்ளவர்களாக செயற்பட வைக்கின்றது என நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் குறிப்பிட்டார்.

தும்மளசூரிய ஆரிஹாமம் அஹதியாநகர் எஸ்.எப்.ரினோஸா முக்தார் எழுதிய “பேனா முனையின் நேசம்” சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா குளியகம்வெல முஸ்லிம் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

குளியகம்வெல முஸ்லிம் வித்தியாலய அதிபர் மௌலவி ஏ.எல்.அஷ்ரப்கான் (மனாரி) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதம ஆசிரியர் இதனைக் குறிப்பிட்டார்,

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

Muthal Pirathi“பேனா முனையின் நேசம்” என்ற நூலை எழுதிய ரினோஸாவை விட அதை உருவாக்குவதில் பங்காற்றிய அவரது கணவர் முக்தாரை நான் பாராட்டுகின்றேன். ஏனெனில் கணவன்மார் வீட்டில் உள்ள வேலைகளை மட்டும் செய்யப்பணிக்கின்ற யுகத்திலே, இந்தப் புத்தகத்தை வெளியிட வைத்து விழாவை நடத்தி எல்லோருக்கும் முன்மாதிரி காட்டி இருக்கின்றார்.

ஒவ்வொரு கணவனும் இவ்வாறு இருந்தால், ரினோஸா போல் எத்தனையோ இலைமறை காய்களாக இருக்கின்ற சகோதரிகள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவார்கள். அதற்கு கணவன்மார்களுடைய ஆதரவு முக்கிய பங்காக இருக்கின்றது.

அந்த வகையில் ரினோஸா தன்னுடைய ஆற்றலை நூலுருவில் வெளிக்கொண்டு வருவதற்கு முக்தார் தனது பங்களிப்பைச் செய்து பாரிய பங்காற்றி இருக்கின்றார். ரினோஸாவுக்கு நிறைய எழுதலாம், ஆனால் தன்னுடைய கணவனுடைய ஆதரவு இல்லையென்றால் அப்படியே பெட்டகத்தினுள்தான் வைக்க வேண்டும்.

Crowd  (1)எங்களுடைய சமூகத்தில் ஊக்குவிப்புகள் மிக மிகக் குறைவு. இது போன்று எத்தனையோ ரினோஸாக்கள் எழுதி இருப்பார்கள். அவர்களை கைதூக்கி விட யாரும் இல்லை. அதனால் முடங்கிப் போய் இருக்கிறார்கள். இந்த வகையில் ரினோஸாவை விட நான் அவரது கணவர் முக்தாரைப் பாராட்டுகின்றேன்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. ரினோஸா பேசியிருக்கின்ற ஒவ்வொரு கதையும் இந்த சமூகத்திலே நடக்கின்ற அவல நிலை பற்றியது. நான் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருக்கின்றேன்.

கடந்த 33 வருடங்களுக்கு மேல் லேக்ஹவுஸில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, முஸ்லிம்களுக்கு தனியான ஒரு பத்திரிகை தேவை என்ற உயரிய இலட்சியத்தோடு நவமணி பத்திரிகையில் இணைந்த நான், கடந்த மே மாதம் முதல் நவமணிப் பத்திரிகையை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தினசரிப் பத்திரிகையாகக் கொண்டு வந்தோம்.

உங்களில் எத்தனை பேருக்கு இப்படியான சமூகம் வெளியிடுகின்ற பத்திரிகையை வாசிக்கின்றீர்கள். முஸ்லிம்களுக்கு எந்த இடத்தில் ஒரு பிரச்சினை நடந்தாலும் அதற்கான நீதி கிடைக்க பத்திரிகையில் எழுதி அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றோம்.

இந்த நாட்டிலே முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக, சமூகரீதியாக தேவைகளைப் புறக்கணிக்கும் போது அதனை உலகுக்கு எடுத்துச் சொல்வதுதான் பத்திரிகை. துரதிஷ்டம் அதனை முஸ்லிம் சமூகம் வாங்குவதுமில்லை படிப்பதுமில்லை. இதுதான் இன்று இருக்கின்ற பாரிய பிரச்சினையும் கூட.

அண்மையில் உடுநுவரவில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் அதிதியாக வந்த ஒரு சிங்கள சகோதரர் சொன்னார். முஸ்லிம் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் சந்தைக்குச் சென்றால் திண்பண்டங்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்குவார்களே தவிர, அறிவை வளர்க்கக் கூடிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் எதனையும் வாங்குவதில்லை.

ஆனால் எங்களுடைய தாய்மார்கள், சகோதர சகோதரிகள் சந்தைக்குச் சென்றால் ஒவ்வொரு வயதுப் பிள்ளைகளுக்கும் ஏற்ற பத்திரிகையை அல்லது சஞ்சிகையை கட்டாயம் வாங்கி வர தவற மாட்டார்கள் என்று சொன்னார்.

ஆகவே இங்கு வருகை தந்து நிறைந்திருக்கின்ற தாய்மார்களே இந்தப் பழக்கம் உங்களிடம் இருக்கின்றதா? மாற்று மத தாய்மார்கள் பத்திரிகைக்கு கொடுக்கும் மதிப்பையும் நீங்கள் பத்திரிகைக்கு கொடுக்கும் மதிப்பையும் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த நிலமை எங்களிடம் இருந்தால் பத்திரிகை அச்சிடுவதற்கு நாங்கள் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.

முஸ்லிம் மக்களுடைய வாசிப்புப் பழக்கம் மிக மிகக் குறைவாக இருக்கின்றது. இன்னும் 5, 10 வருடங்களில் இந்த நாட்டிலே, திறமைக்குத்தான் இடம் இருக்கும்.

உங்களுடைய பிள்ளை படித்திருந்தால், பரீட்சையில் சித்தியடைந்தால் மட்டுமே, சட்டக் கல்லூரிக்குப் போகலாம். ஆசிரியர் தொழில் செய்யலாம். வேறு தொழில்கள் பெறலாம். அதைவிடுத்து பாராளுமன்ற உறுப்பினர் மூலம் தொழில் பெறலாம் என்று நினைப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்.

எனவே, உங்களுடைய ஒவ்வொரு பிள்ளையையும் ஆற்றலுள்ளவர்களாக தயார் படுத்த வேண்டுமானால் அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் நல்ல எதிர்காலம் உள்ள பிள்ளைகளாக, நல்ல கல்விமான்களாக, நல்ல சட்டத்தரணிகளாக, நல்ல கணக்காளர்களாக, நல்ல உலமாக்களாக, நல்ல வியாபாரிகளாக வரவேண்டுமானால் அந்தப் பிள்ளைக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

எனது ஊரில் ஒரு பிள்ளை க.பொ.த. உ/த பிரிவில் 3 பாடத்திலும் ஏ சித்தி பெற்றார். நான்காவது பாடமான பொது அறிவுப் பாடத்தில் 36 புள்ளிகளுக்கு மேல் பெற்றால்தான் ஒருவர் பல்கலைக்கழகம் செல்ல முடியும். அவர் 26 புள்ளிகளைப் பெற்றதனால் 3 பாடங்களிலும் அதிஉயர் சித்தியான ஏ சித்தி பெற்றிருந்தும் அவர் பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லை. காரணம் அந்த வீட்டில் பத்திரிகை வாசிப்பது இல்லை. பொது அறிவைத் திரட்டிக் கொள்ள அந்தப் பிள்ளைக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இதற்குக் காரணம் அந்தப் பிள்ளை அல்ல. அந்தப் பிள்ளையின் பெற்றோர்கள். பொது அறிவைப் பெற தேடல் வேண்டும். தேடலுக்கு வாசிப்புப் பழக்கம் ஆரம்பத்திலிருந்து பிள்ளைகளுக்கு வரவேண்டும். அதற்கு பெற்றோர்களாகிய நீங்கள்தான் ஆரம்பத்திலிருந்தே தங்கள் பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம். நான் சொல்வது பத்திரிகை மட்டுமல்ல. நல்ல நூல்களை வாசிக்க வேண்டும். வாசிக்கின்ற போதுதான் எமது மூளை என்ற கணனியில் நிறைய விடயங்கள் பதியும். அவ்வாறு பதிந்தால் மட்டும்தான் சமூகத்தோடு போட்டியிட்டு உயர் நிலைக்கு வரலாம்.

Crowd  (2)நாங்கள் இஸ்லாமிய வரையறைக்குள் இருந்து கொண்டு எமது பணியையும் கல்வியையும் கற்க வேண்டும். அதன் மூலம் முன்னேற வேண்டும். எங்கள் சமூகத்துக்கு இருக்கின்ற எதிர்காலம் எங்களுடைய பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைக் கொடுப்பதுதான்.

இந்த நாட்டிலே எங்களுக்கு கதவுகள் அடைக்கப்பட்டாலும் எங்களுடைய பிள்ளைகள் நன்றாகப் படித்தால், உலகத்தில் எந்த இடத்தில் சென்றாலும் சிறப்பாக தொழில் செய்வதற்கு உலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. அதற்கு கல்விதான் முக்கியம். கல்வி நம் பிள்ளைகளிடம் இருந்தால் உலகத்தில் எந்த இடத்திலும் சென்றும் சிறப்பாக தொழில் புரியலாம். சிறப்பான நிலைக்கு வரலாம். எங்களுடைய வறுமை நிலையை மாற்றலாம்.

எனவே எங்களுடைய பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சிறந்த கல்வியைக் கொடுப்பதுõன் நாங்கள் செய்கின்ற பெரும் தியாகம்” என்றார்.

விழாவில் கிராத் மற்றும் இஸ்லாமிய கீத பாடலை அல்ஹாபிழ் எம்.எப்.எம். ஸஹ்ரான், வரவேற்புரையை ஆசிரியை மஸாஹிமா நௌபர்தீன், தலைமையுரையை ஏ.எல்.அஷ்ரப்கான் (மனாரி), அறிமுகவுரையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், சிறப்புரையை குளியாப்பிட்டி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். அஷ்ரப், நூலின் வெளியீட்டுரையை நவமணி உதவி ஆசிரியர் கலைவாதி கலீல், நயவுரையை சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி, ஏற்புரையும் நன்றியுரையையும் நூலாசிரியர் எஸ்.எப். ரினோஸா முக்தார் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பை ஏ.எம். முஹம்மத் ரளீம், ஜெஸ்மீன் ஆகியோரும் வழங்கினர்.

இந்நிகழ்வின் விசேட அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், , நவமணி இந்திய ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. சாஹுல் ஹமீத், தினகரன் ஆசிரியர் பீட உறுப்பினர் சாதிக் சிஹான், நவமணி ஊடகவியலாளர் சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர், கிண்ணியா அமீரலி உட்பட பல விசேட அதிதிகள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஊர்ப் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY