எந்தவொரு நாட்டிலும் வழங்கப்படாத பாதுகாப்பினை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கினேன்

0
224

“ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்துள்ள போதும் தனது பாதுகாப்பிற்காக எந்தவொரு இராணுவ வீரரையும் பயன்படுத்தவில்லை” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதியிடம் உள்ள மிகவும் பாதுகாப்பான வாகனத்தையும் அவரது பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தன்மீது குற்றம் சுமத்திய போதும் தோல்வியடைந்த அரச தலைவருக்கு அவர் விரும்பும் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களை தெரிவு செய்து ஹெலிகொப்டரில் வீடு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிய ஜனாதிபதியாக தான் விளங்குவதாகவும் இவ்வாறான ஒரு சம்பவம் உலகின் எந்தவொரு நாட்டிலும் அறியக் கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று முந்தினம் (09) பிபிலை நகரில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மாவட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சாஸ்திரக்காரர் ஒருவர் குறிப்பிட்டதற்கு அமையவன்றி 2015 மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்த ஜெனீவா மனித உரிமை பேரவையின் அறிக்கை மற்றும் இன்று அரசு மீது குற்றம் சுமத்தும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவது தொடர்பாகவும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தமை காரணமாகவே ஜனாதிபதி பதவியில் பணியாற்றுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் எஞ்சியிருந்த வேளையில் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.

இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையானது எமது நாட்டுக்கு மட்டுமன்றி முழு உலக நாடுகளும் எதிர்நோக்கும் ஒரு பொதுவான பிரச்சினை எனவும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தாலும் எமது நாட்டிலும் இந் நிலைமை ஏற்படுவதை தடுக்க முடியாதெனவும் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், யுத்தத்தை வென்ற தலைவர்களை மின்சாரக் கதிரைக்கும் படைவீரர்களை இராணுவ நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்வதாக அன்று மேடைகளில் கூக்குரலிட்ட போதும், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனாலேயே மின்சாரக் கதிரையையும் சர்வதேச நீதிமன்றத்தையும் இந்த நாட்டு மக்களின் இதயங்களிலிருந்து அகற்றி மஹிந்த ராஜபக்ஷவையும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மின்சாரக் கதிரைக்குப் பதிலாக பாராளுமன்ற ஆசனத்தில் உட்கார வைப்பதற்கு முடிந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய கட்சிகளை உருவாக்கி ஒரு நாளும் வெற்றிபெற முடியாது என்பதுடன் அன்று திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க புதியதொரு கட்சியை உருவாக்கிய போதும் இறுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தே ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமையை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். நாட்டின் முன் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் காரணமாகவே 2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தன்னை வெற்றியடையச் செய்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று எந்தவொரு நபரும் அச்சம் பீதி இன்றி வாழ முடியுமான ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்பன நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிராகரிக்கப்பட்ட நாட்டின் கௌரவத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகவே கடந்த ஓராண்டு காலத்திற்குள் சர்வதேசத்தை வெற்றி கொள்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் மாதம் ஜப்பானில் இடம்பெறவுள்ள 07 உலக வல்லரசு நாடுகளின் சம்மேளனத்தில் கலந்து கொள்வதற்கு வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அரச தலைவர் ஒருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் பொருட்டு கட்சி தோல்வியடைந்தமைக்கான விடயங்களை கண்டறிய வேண்டுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, பிரதேச அரசியல் பிரதிநிதிகள் கற்பழிப்புக்கள், ஆட்கொலை மற்றும் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டதன் பயனாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்களினால் நிராகரிக்கப்பட்டதாகவும் அன்று கட்சியின் செயலாளராக அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக மத்திய தெரிவுக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டபோது அப்போதைய தலைவர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சிந்தனையில் அமைந்த தூய்மையான மாசற்ற கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பினை நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சிறந்த ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சிறந்த ஒரு கட்சியை உருவாக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார். அரசியல் கட்சி என்ற ரிதியில் வெவ்வேறான நிகழ்ச்சி நிரல் காணப்பட்ட போதும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் கோப உணர்வு மற்றும் குரோதம் என்பவற்றின் அடிப்படையில் சச்சரவுகளில் ஈடுபடாது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒரே நோக்கத்தின் கீழ் ஒன்றுபட வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பிரதி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன ஆகியோரும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் பிபிலை நகரில் நிர்மாணிக்கப்பட்ட சதொச வியாபார கட்டிடத் தொகுதியும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

#Newslk

LEAVE A REPLY