7வயது அகமதின் SMS ஆல் நடந்தது என்ன?

0
240

ஆப்கானிஸ்தான் சிறுவனின் எஸ்.எம்.எஸ். தகவலால் லாரியின் ரகசிய அறையில் மூச்சுத் திணறிய 15 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிரான்ஸின் கலாய்ஸ் துறை முகம் அருகேயுள்ள வனப்பகுதியில் சுமார் 9-க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. அங்கு 3500-க்கும் மேற்பட்ட அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். அடிப்படை வசதிகள் இன்றி வாழும் அவர்களுக்காக சமூக சேவகி லிஸ் கிளக் வனப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களில் அகதிகள் முகாமில் வசித்த 130-க்கும் மேற்பட்ட சிறார்கள் காணாமல் போயுள்ளனர். எனவே பாதுகாப்பு கருதி அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் சமூக சேவகி லிஸ் கிளக் செல்போன் வழங்கியுள்ளனர்.

பெரும்பாலான சிறார்களுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அவர்களுக்கு ஆங்கிலமும் பிரெஞ்சும் கற்றுக் கொடுத்துள்ளார். அவசர காலங் களில் செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பவும் பயிற்சி அளித்துள்ளார்.

கலாய்ஸ் பகுதி பிரிட்டன் எல்லையில் அமைந்திருப்பதால் அகதிகள் முகாமில் இருந்து பிரிட்டனுக்குள் பலர் சட்டவிரோத மாக ஊடுருவி வருகின்றனர். இதை தடுக்க இருநாட்டு எல்லை யில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்புப் படையின ருக்கு தெரியாமல் பிரான்ஸில் இருந்து பிரிட்டனுக்கு செல்லும் லாரிகளின் ரகசிய அறைகளில் ஒளிந்து அகதிகள் ஊடுருவி வருகின்றனர். இவ்வாறு செல்லும் அகதிகள் லாரிக்குள் மூச்சுத் திணறி உயிரிழப்பது அடிக்கடி நடைபெறுகிறது.

அண்மையில் ஆப்கானிஸ் தானை சேர்ந்த அகமது என்ற 7 வயது சிறுவன் உட்பட 15 அகதிகள் லாரியில் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் ஊடுருவினர். பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக டிரைவர் லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் 15 அகதிகளும் ஆக்ஸிஜன் இன்றி மூச்சுத் திணறியுள்ளனர்.

அப்போது சமயோசிதமாக செயல்பட்ட சிறுவன் அகமது தனது செல்போனில் இருந்து சமூக சேவகி லிஸ் கிளக்கிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினான். அதில் தாங்கள் லாரியில் சிக்கி உயிருக்கு போராடுவதாகவும் உடனடியாக காப்பாற்றும்படியும் கூறியிருந்தான்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மாநாட்டில் லிஸ் கிளக் பங்கேற்றிருந்தார். அங்கிருந்து அவர் பிரிட்டிஷ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். துரிதமாக செயல்பட்ட போலீஸார், சிறுவனின் செல்போன் டவர் சிக்னலை வைத்து லீசெஸ்டர்ஷைர் நகரில் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

மயங்கிய நிலையில் இருந்த சிறுவன் அகமது உட்பட 15 அகதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரியா நாட்டில் கேட்பாரற்று நின்ற லாரியில் 71 அகதிகளின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடு களின் எல்லைகளில் லாரிகள் முழுமையாக சோதனை செய்யப் படுகின்றன. ஆனால் அதையும் மீறி மனித கடத்தல் தொடர்கிறது.

LEAVE A REPLY