கலவரங்களினால் காணிகளை இழந்தவர்கள் இனி கலங்கவேண்டியதில்லை. அவர்களுக்கு மீண்டும் காணி உரித்தாகும்: அலிஸாஹிர் மௌலானா

0
290

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

போர் இடம்பெற்ற காலங்களில் தமது பூர்வீகக் காணிகளை விட்டு இடம்பெயர்ந்து அல்லற்படும் மக்கள் மீண்டும் தமது சொந்த நிலத்தை அடைந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது. கலவரங்களினால் காணிகளை இழந்தவர்கள் காணி கிடைக்காது என்று இனி கலங்கவேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் மீராகேணியில் ஞாயிறன்று 10.04.2016 இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

அஸ்பால் ஆன்மீகப் பாடசாலையில் அல்குர்ஆனை கற்கும் 35 மாணவர்களுக்கு ஆடை வழங்கும் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஸீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அலிஸாஹிர் மௌhலானா யுத்தம் இடம்பெற்ற கடந்த சுமார் 30 வருட காலப் பகுதியில் வடக்கு கிழக்கிலுள்ள எல்லா சமூக மக்களும் தாங்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களை விட்டு வெளியேற நேரிட்டது.

இவ்வேளையில் அவர்கள் மற்ற அசையும், அசையாச் சொத்துக்களின் பொருளாதார இழப்போடு தமது காணிகளையும் இழந்தார்கள்.

அவர்களது காணி என்பது அவர்கள் உயிரோட்டமான உணர்வுடன் வாழ்ந்த நிலத் தொடர்பு என்பதால் அதனை மீண்டும் அடைந்து கொள்ள முடியாது போனதின் காரணமாக பலர் ஏக்கப் பெருமூச்சுடன் உயிர் நீத்தும் விட்டார்கள்.

தமது பூர்வீக நிலங்களில் பயிர் செய்து, நீரை அள்ளிக் குடித்து, மரங்களின் கீழே உறங்கி இயற்கையோடு வாழ்தல் என்பது உணர்வுபூர்வமான விடயம்.

இந்த விடயத்திற்கு இப்பொழுது நல்ல முடிவு கிடைத்திருக்கின்றது.

கலவர காலத்தில் காணிகளை இழந்தவர்கள் மீண்டும் அதனை அடைந்து கொள்ள சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது கலவரங்களினால் காணிகளை இழந்ததின் காரணமாக அவர்களுக்கு உண்டான மனக் காயங்களைக் குணப்படுத்த உதவும்.

காணி கிடைக்கவில்லையே என்ற ஏக்கப் பெரு மூச்சுக்கு இனி அவசியமில்லை” என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஏறாவூர் பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஸீம், இளைஞர் விவசாயக் கழக் ஆலோசகர் எம்.எல். அப்துல் றஹுமான் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும், பெற்றோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY