கேரளா கோவில் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

0
210

கேரளாவில் கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொல்லம் புட்டிங்கல் தேவி கோவிலில் வருடம் தோறும் திருவிழா நடைபெறும் போது பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும். கோவில்களில் பட்டாசு வெடித்து விழாக்களை கொண்டாட மாவட்ட மட்டத்தில் தடை உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெற்று பட்டாசு வெடிக்கப்படுவது வழக்கமாக இருந்துஉள்ளது. தேவி கோவிலில் திருவிழாவில் பட்டாசு வெடிக்க அதிகமான பட்டாசுக்கள் வாங்கி குவிக்கப்பட்டு உள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் பட்டாசு வெடிக்கப்பட்ட போது, அதிலிருந்து சென்ற தீப்பொறியானது வெடிப்பொருட்கள் வைத்திருந்த குடோனில் விழுந்தது. இதனையடுத்து வெடிப்பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த கிடங்குக்கு அருகில் இருந்த திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கட்டிடம் ஒன்று முற்றிலும் வெடித்து சிதறிஉள்ளது. உடனடியாக வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றது. தீ விபத்து மற்றும் கட்டிடம் விழுந்து சிக்கியதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றது.

தீ விபத்தில் காயம் அடைந்த 350-க்கும் மேற்பட்டோர் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு விரைந்து உள்ளது. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களிலும் சிலர் உயிரிழந்தால் பலி எண்ணிக்கையானது 102- ஆக உயர்ந்து உள்ளது. விபத்து தொடர்பாக விசாரிக்க கேரளா மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

கோவில் நிர்வாகத்திற்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையும் துரிதமாக நடைபெற்று வருகிறது. போலீசார் வெடிப்பொருட்கள் விநியோகம் செய்தவர்களின் இடங்களில் சோதனையும் மேற்கொண்டு உள்ளனர்.

விமானப்படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் விதிமுறைகளில் தளர்வு செய்து உள்ளது. கேரளா மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. நாட்டின் பிற பகுதியில் இருந்தும் மருத்துவர்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

கோவில் திருவிழாவில் போட்டி போட்டு பட்டாசு வெடித்ததன் காரணமாகவே இந்த துயரச்சம்பவம் நேர்ந்து உள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. கேரள மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும் நிதிஉதவியாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

மாவட்ட கலெக்டர் ஏப்ரல் 9-ம் தேதியே பட்டாசு வெடிக்க அனுமதி மறுத்து உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது. மாலை 3 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக ஆலோசிக்க கேரள மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அனுமதியை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY