(Live Video) கேரள கோயில் வெடி விபத்து: 86 பேர் பலி, 350 பேர் காயம்

0
565

kerala fireworksகேரளத்தின் கொல்லம் அருகே உள்ள கோயிலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதன் விளைவாக, தீயில் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 86 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது பரவூர் புட்டிங்கல் தேவி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அதற்காக, பட்டாசுகள் வாங்கி இருப்பு வைப்பதும் வழக்கம்.

அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் கிடங்கில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அதையடுத்து, அங்கிருந்த வெடிபொருள்கள் முற்றிலுமாக வெடித்துச் சிதறின. வெடி விபத்தில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 86 பேர் உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், தீயை அணைக்கும் பணியிலும், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கர வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரும் பக்தர்கள் ஆவர். இந்த வெடி விபத்து ஏற்பட்ட கிடங்குக்கு அருகில் இருந்த திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கட்டிடம் ஒன்று முற்றிலும் வெடித்துச் சிதறியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாடுகளை முற்றிலுமாக தளர்த்தியுள்ளது.

கேரள அரசுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கொல்லம் கோயிலில் ஏற்பட்ட இந்த விபத்து, கேரள மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY