வாயு தொல்லை நீங்க….

0
421

உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாயுத் தொல்லையினால் அவதிப் படுகிறார்கள். இது ஒரு வியாதி அல்ல; ஆனால் ஒரு வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுக்கும் மார்பிற்கும் நடுவே வலி – சில சமயங்களில் மார்பை அடைப்பது போன்ற உணர்வு இவையெல்லாம் வாயுத் தொல்லையின் அறிகுறிகளாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் காணப்படும்.

நல்ல ஆரோக்கியமான உடலுக்கு, இருநேரம் சிற்றுண்டியும் ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. அந்த இரு சிற்றுண்டியிலும் ஒரு வேளை (காலை அல்லது இரவு) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு.

காலை வேளை உணவைப் பெரும்பாலோர் தவிர்ப்பதோ அல்லது அக்கறையின்றி அவசர உணவாகவோ எடுப்பதோ பெருகி வருகிறது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தை குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல், கைக்குத்தல் புழுங்கல் அரிசி கஞ்சி, சிறு குழந்தைகளாயிருப்பின் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி மிக நல்லது. இன்று பிரபலமாகி வரும் ’ஒட்ஸ் கஞ்சி’க்கு சற்றும் குறைவில்லாததும், நம் விவசாயியை வாழ வைப்பதுமான இந்த உணவு நமக்கு உகந்தது.

வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல்/அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளி துண்டுகள், இளம்பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு எடுக்கலாம்.

மதிய உணவில் நிறைய காய்கறிகள், கீரை கூட்டு/கடைசல்,-இவற்றுடன் அரிசி உணவு அளவாய் சாப்பிடுதலும், இரவில் காலை உணவு போல் எளிய சத்தான உணவு எடுத்தலும் அவசியம்.

வயிற்று உப்பிசம், அசீரணம், சத்தமாய் பயமுறுத்தும் ஏப்பம், நெஞ்செரிச்சல், எப்போதெனினும் எடுக்கும் விருந்திற்கு கூட ஏற்படும் உடனடியாக வரும் வாய்த்தொல்லை என ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாது, உணவில் கவனம் செலுத்தி சரி செய்வது அவசியம். உணவில் என்ன செய்யலாம்?

அதிக காரத்தை தவிர்த்துவிடுங்கள். மிளகாய் வற்றல் பயன்படுத்தவேண்டிய இடங்களில் மிளகு பயன்படுத்திப்பழகுங்கள். எண்ணெயில் பொரித்த உணவை கூடிய மட்டும் தவிர்ப்பது நல்லது. சரியான வேளையில் உணவை எடுக்கத் தவறாதீர். மதிய உணவை 4 மணிக்கும், இரவு உணவை டி.வி.யில் அத்தனை பேரும் அழுது முடிந்தபின்னரோ அல்லது ’டி20’-மேட்ச் முடியும் போதும் தான் சாப்பிட முடியும் என அடம் பிடிக்க வேண்டாம்.

வலி நிவாரணி மருந்துகளை அவசியமின்றி எடுக்க வேண்டாம். புகை, மது இரண்டும் கேன்சரை வயிற்றுப் புண் வழியாக அழைத்துவரும் கொடூரவிஷயங்கள். மனதை எப்போதும் இலகுவாக வைத்திருங்கள். எப்போதும் டென்ஷனுடன் இருப்பவருக்கு கண்டிப்பாக சீரண்க் கோளாறு வந்துவிடும்.இன்னும் மன அழுத்தத்தில் (டிப்ரஷன்) இருப்பவர்களுக்கு அசீரணமும் வாய்த் தொல்லையும் கூடுதல் தொல்லை தரக் கூடியன.

வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்
நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.
உணவு நம் இரைப்பைக்குள் சென்று அங்கு பலவிதமான செரிமான நீர்களுடன் கலந்து செரிக்கப் படுகின்றன.

அவ்வாறு செரிக்கப்படாத உணவின் மிச்சங்கள் பெருங்குடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது.

ஏன் சரிவர செரிமானம் ஆவதில்லை என்றால், நம்முடைய சாப்பிடும் பழக்கம் சரிவர இருப்பதில்லை. அதாவது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நம் வயதிற்கும் நாம் செய்யும் வேலையின் அளவிற்கும் ஏற்ற சாப்பாட்டை சாப்பிடத் தவறுகிறோம். காலை உணவை தவிர்ப்பது, பசி நேரத்தில் காபி, தேநீர் முதலிய பானங்களை குடிப்பது, நீண்ட நேரத்திற்கு பட்டினி கிடப்பது அல்லது கிடைத்ததையெல்லாம் கிடைத்த போதெல்லாம் தின்பது என்று நம் வயிற்றை நாமே பாடாய் படுத்துகிறோம். ‘உனக்காக உழைக்கும் என்னை நீ சரியாக கவனிக்கவில்லை’ என்ற நம் வயிற்றின் கூக்குரல் தான் இந்த வாயுத் தொல்லை.

மலச்சிக்கல்: உணவு மிக நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதாலும், கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற்றப் படாததும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணமாகலாம்.

அல்சர் எனப்படும் குடல் புண்:
இதுவும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணம். சரிவர மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால் வேறு பல சிக்கல்களை உண்டாக்கும்.

வேறு காரணங்கள்:

உணவுக் குழாய், குடல், சிறுகுடலின் முற்பகுதியில் ஏற்படும் கோளாறுகள்.
வயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் சுரப்பது.

குடலில் இருக்கும் திசுக்கள் மெலிவடைவது.
பித்தப்பை, கணையம் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்.
வாயுத் தொல்லையை எப்படித் தவிர்ப்பது?

இதற்கு மிக முக்கியம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது. எந்தப் பொருட்கள் சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும். அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள்.

சிலருக்கு பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.

அதிகக் கொழுப்பு, அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகிறது. அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுவை உண்டுபண்ணுகிறது. ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல், சமமான இடைவெளியில் குறைந்த அளவு சாப்பிடுங்கள். நீண்ட நேரப் பட்டினி வேண்டாம். சாப்பிடும்போது ஆத்திரம் அவசரம் கூடாது. உணவை நிதானமாக மென்று தின்னுங்கள். இதனால் செரிமானம் நன்றாக ஆவதுடன், வாயு தோன்றுவதும் தடுக்கப்படுகிறது.

புதிதாக சமைக்கப்பட்ட உணவை உண்ணவும். காபி, தேநீர், ஆல்கஹால் முதலியவற்றை அதிகம் குடிக்காமல் ஒரு அளவில் நிறுத்திக் கொள்ளலாம். அதிகப்படியான வேலை, வேலை டென்ஷன், மனதில் தோன்றும் பய உணர்வு இவை போன்றவையும் செரிமானத்தை பாதிக்கும். புகைப் பழக்கம், குடிப்பது இவையும் வயிற்றுக்குப் பகைவர்கள்.

அதிகக் காரம், மசாலா, எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இரவு நேரம் கழித்து உண்பது வேண்டாம்.

அசிடிட்டிக்கென்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளை அடிக்கடி சாப்பிடவேண்டாம். முதலில் குணம் ஏற்படுவதுபோல தோன்றினாலும் நாளடைவில் வயிற்றைக் கெடுத்துவிடும். அதேபோலே வலி நிவாரணிகளும் வயிற்றுக்கு நல்லதல்ல.

தினசரி உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம். சாப்பிட்டவுடன் சிறிது நடக்கலாம்.

ஒரு எச்சரிக்கை:

சிலசமயம் இதய நோய்க்குண்டான அறிகுறிகள், வாயுத்தொல்லைக்கு உண்டான அறிகுறிகள் போலவே இருக்கும். எந்த ஒரு உடல் பாதிப்பானாலும் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது. வாயுத் தொல்லைதானே என்று நினைத்து அலட்சியப் படுத்தவேண்டாம். ஆரம்ப நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பல நோய்களை முற்றவிடாமல் நம்மை நாமே பாது காத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY